மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

காவிரியில் தண்ணீர் வரும் முன் மயிலாடுதுறை துலாக் கட்டத்தை தூய்மைப்படுத்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக காவிரி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ம் தேதி திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் கல்லணை வழியாக மயிலாடுதுறை துலாக்கட்டம் வந்தடைந்து பூம்புகாரில் கடலோடு கலக்கும். காவேரி தண்ணீர் வழிந்தோடி வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தின் இருபுறமும் அமைந்துள்ள நிலங்களில் உள்ள விவசாய பெருங்குடி மக்களுக்கு உதவுவதோடு, நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தி தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரத்தையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும் காவேரி ஆற்றில் இருந்து தான் பல்வேறு நகரங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் சென்று கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் மயிலாடுதுறை நகரின் மத்தியில், கங்கையின் பாவத்தை போக்கிய காவேரி என்னும் புகழ்மிக்க துலா கட்டப் பகுதிக்கு காவிரி நீர் வருகின்ற பொழுது அது மிகவும் சிறப்பு மிக்கதாக போற்றப்படுகிறது. குறிப்பாக புனிதம் நிறைந்த துலா கட்டப் பகுதியில் காவேரி தண்ணீர் வருகின்ற பொழுது அதில் நம்பிக்கையோடு புனித நீராடுகின்ற பக்தர்கள் தங்களுடைய பாவம் போக்கப்படுவதாக கருதுகின்றனர். அப்படிப்பட்ட புனித பகுதியான துலா கட்ட காவேரி பகுதி தற்பொழுது இரவு நேரத்தில் கழிவுநீர் கலக்கின்ற சூழலும்,பிளாஸ்டிக் குப்பை, கூளங்கள், செடிகள் மண்டிக்கிடப்பதையும் காண முடிகின்றது. ஆகவே உடனடியாக துலா கட்டப் பகுதியை தூய்மைப்படுத்தியும், உடைந்த பாட்டில்களை அகற்றியும், படித்துறைகளை சுத்தம் செய்தும் அப்பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் அச்சமின்றி குளித்து புனித நீராடுவதற்கு ஏதுவான சூழலை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். இன்று ஜூன் 12ல் திறக்கப்படும் தண்ணீர் ஒரு வார காலத்திற்குள் இப்பகுதியை வந்தடையும் என்பதனால் தனி கவனம் செலுத்தி விரைவாக தூய்மைப்படுத்தி தர பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாவட்ட நிர்வாகம் ,நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post