அ.இ.அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 09.06.2023 அன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத பல்லடம் சட்டமன்ற தொகுதி சித்தம்பலம் ஊராட்சியில் தனது அதிகார வரம்பை மீறி திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் அதிகாரிகள் துணையுடன் நியாய விலை கடையை திறந்து வைத்ததுடன் இந்த விடியா திமுக ஆட்சியில் பேருந்துகள் இயக்கபடாததையும், பட்டா வழங்காததையும் பொது மக்கள் முறையிட்டுள்ளார்கள். நாங்கள் பல நாட்களாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் சுட்டி காட்டி உள்ளேன்.
அதற்கு பதிலளிக்க முடியாத அவர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொகுதிக்குள் வருவதில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளார்.
தினமும் காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திப்பதுடன் தொகுதிகுட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவையை அரசாங்கத்தின் மூலமாக தீர்வு காண முயன்று வருகிறேன். எனது தொகுதிக்கு தேவையான மிக முக்கியமான 10 கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திடம் சமர்பித்து பல மாதங்கள் ஆகியும் அவை யாவும் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது
அதில் பெரும்பான்மையான கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணமே இந்த அரசாங்கத்திற்கு இல்லை. எனது 2 சட்டமன்ற உரைகளிலும் தொகுதி தேவைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தும் பலனில்லை.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இத்தொகுதியின் தேவைகள் குறித்து நான் மேற்கொண்ட முயற்ச்சிகள் குறித்து தெரிய வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் என் அலுவலகத்திற்கு வரட்டும். இந்த அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு நான் வைத்த கோரிக்கை கடித நகல்களையும் அதற்கு வந்த பதில்களையும் அவர் பார்க்கலாம்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரான அவரே ஒரு டாஸ்மாக் கடையினை போராட்டம் நடத்தி, முற்றுகை இட்டு கண்டன அறிக்கைகளை வெளியிட்டு தான் அகற்ற வேண்டிய சூழல் இருக்கும் போது எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான எங்களின் கோரிக்கைகளை இந்த அரசு எந்த அளவு பரிச்சிலனை செய்யும் என்று அவருக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை.
அவரின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் குறைகளை அதே தொகுதியில் வசிக்கும் என்னிடம் பலரும் தினமும் சொல்லிய படி தான் உள்ளார்கள். அவர் அதனை முதலில் தீர்த்து விட்டு மற்ற தொகுதிகளை குறித்து பேசுவது தான் அறமாக இருக்கும். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரான என்னை புறக்கணித்து ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் என்ற முறையில் மரபுகளை மீறி அரசு விழாவிற்கு அழைத்து ஆளும் கட்சிக்கு ஊது குழலாக செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
தொகுதி பொதுமக்களின் ஆதரவுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் என்னுடைய தொகுதி மக்களுக்கு உண்மையானவனாக நான் உழைத்து கொண்டிருக்கிறேன் அதே போல் அவரவர்கள் தங்களை தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு விசுவாசமாய் செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.