பவானி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலையில் இருந்து உற்பத்தியாகி கேரளாவில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவில் நுழைந்து மீண்டும் தமிழகத்தை நோக்கி பாய்கிறது.
பவானி 217- கிலோமீட்டர் நீளமுள்ள வற்றாத நதியாகும், இது பெரும்பாலும் தென்மேற்கு பருவமழையால் நீர்பெறுகிறது. மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர் அதிகரிக்கிறது .
2,400 சதுர மைல் பரப்பளவு நீர்ப்பிடிப்பு பரப்பை கொண்ட இந்த ஆறு, தமிழ்நாட்டில் 87 சதவீதமும், கேரளாவில் 9 சதவீதமும், மற்றும் கர்நாடகாவில் 4 சதவீதமும்இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கிறது.
மேற்கு மற்றும் கிழக்கு வராக ஆறுகள் உட்பட 12 பெரிய ஆறுகள் தெற்கு நீலகிரி சரிவுகளில் பவானியுடன் இணைகின்றன. முக்காலியில், பவானி திடீரென 120 டிகிரியில் வடகிழக்கு திசையில் திரும்பி, அட்டப்பாடி பீடபூமி வழியாக மேலும் 25 கிலோமீட்டர்கள் (16 மைல்) பாய்கிறது. இது வடக்கே இருந்து வரும் குந்தா நதியால் வலுப்பெறுகிறது. வற்றாத நீரோடையான சிறுவாணி ஆறு மற்றும் தென்கிழக்கில் இருந்து பாய்ந்து கொடுங்கரப்பள்ளம் ஆறு முறையே கேரள - தமிழ்நாடு எல்லையில் பவானியுடன் இணைகிறது.
பின்னர் இந்த நதி நீலகிரியின் அடிவாரத்தில் கிழக்கு நோக்கிப் பாய்ந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள பத்திர காளியம்மன் கோயிலுக்கு அருகில் சமவெளியில் நுழைகிறது. வடமேற்கிலிருந்து வரும் குன்னூர் ஆற்றில் இணைந்த பிறகு, சுமார் 30 கிலோமீட்டர்கள் கீழ்நோக்கி பாய்கிறது. இத்துடன் துணை நதியான மோயார் ஆறு இதில் இணைகிறது. மோயாறு இணைந்த பிறகு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கீழ் பவானி திட்ட அணைக்கு வருகிறது. இந்த அணை 1948 முதல் 1955 வரை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை இந்திய அளவில் மிகப்பெரிய மண் அணையாகும். 120 அடி உயரம் கொண்ட இந்த அணை 77.4 சதுர கி.மீ., நீர்த்தேர்க்க பகுதி ஆகும். இந்த அணையில் 929 மில்லியன் கன அடி நீரை இந்த அணையில் தேக்கி வைக்க முடியும்.
பவானி ஆற்றால், ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சுமார இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த ஆறானது பவானிசாகர், சத்தியமங்கலம், சதுமுகை, கொமாரபாளையம், மாக்கி னாங்கோம்பை, டி.என்.பாளையம், கொடிவேரி, கோபிச் செட்டிபாளையம், அத்தானி, ஆப்பக்கூடல் வழியாக பாய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 160- கிலோமீட்டர் பாய்கிறது. இதில் முக்கியமாக 1283ல் கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாய் மூலமாக பாசனத்துக்கும் நீர்செல்கிறது. பவானி ஆற்றில் சுமார் 130 சிற்றோடைகள் கலக்கின்றன. குண்டேரிப்பள்ளம், வறட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் ஆகிய ஓடைகளும் பவானி ஆற்றில் கலக்கின்றன.
இப்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பாய்ந்து வந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பயனளிக்கக் கூடிய ஆறு பவானி ஆறாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமும், பாசன நீராதாரமாகவும் விளங்கக் கூடிய ஆறு பவானி ஆறாகும்.
இந்த ஆற்றின் குடிநீர் மிகவும் சுவைமிக்கதாகவும் இருக்கிறது.
இப்படி சிறப்பு மிக்க பவானி நதியில் நஞ்சை கலப்பது போல, பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன. காகித ஆலை கழிவுகள், சாய ஆலை கழிவுகள், கெமிக்கல் கழிவுகள் கலக்கப்படுகின்றன.
மேலும் பவானி நதிக்கரையில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் சாக்கடை கழிவுகளும் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் உயிரோட்டமான பவானி ஆறு நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.
இதனால் ஆற்று நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதுடன், டி.டி.எஸ்., அளவும் அதிகரிக்கிறது. அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. கால்நடைகளில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. மனிதர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆற்று நீரை 70 சதவீத விவசாயத்திற்கும், 20 சதவீதம் குடிநீர் ஆதாரமாகவும், 10 சதவீத தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பவானி ஆற்று நீரை தொழிற்சாலைகள் அதிகம் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டும் நிலவுகிறது.
பவானி ஆற்றில் மாசு கலப்பதை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கடந்த 30 ஆண்டுகளில் கோவை, திருப்பூர் பகுதிகளில் தொழில் வளர்ச்சி காரணமாக காவிரியில் கலக்கிற நொய்யல் ஆற்றினை மாசுபடுத்தினார்கள். அந்த ஆற்று நீரை விவசாயத்துக்கும், குடிநீராகவும் பயன்படுத்த முடியாமல் போனது. இன்றைக்கு கழிவுகளின் தேக்கமாக அழிவின் சாட்சியாக நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணை இருக்கிறது. அது போன்ற நிலைமை பவானி ஆற்றுக்கு வரக்கூடாது.
எனவே அனைவரும் இணைந்து பவானி ஆற்றினை பாதுகாப்போம். இதன்மூலம் மனித சமுதாயத்தை பாதுகாப்போம்.
-நாராயணசாமி
செய்தியாளர், தமிழ் அஞ்சல்