காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகரில் இருந்து சுமார் 150 கி.மி., தொலைவில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்து உள்ளது. சுமார்14000 அடி உயர மலை மேல் உள்ள பிரம்மாண்ட குகையில் பனி லிங்கமாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
பார்வதி தேவிக்கு சிவபெருமான் அமர ரகசியத்தை கூறிய இடம் இந்த இடம் என்பதால் இந்த கோவிலில் தரிசனம் செய்வது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த குகைக்கோவில் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் உறை பனி பொழியக் கூடிய இந்த அமர்நாத் குகைக்கோவில் நோக்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடினமான மலைப்பாதையில் நடந்து சென்று இறைவனை வழிபட ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகமாகிறது. இந்த 2023 ஆம் ஆண்டில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 62 நாட்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதி உண்டு.
நடந்து செல்ல முடியாதவர்கள் ஹெலிகாப்டரில் செல்லலாம். குதிரை, பல்லக்கு வசதிகளும் இருக்கின்றன. இதனால் அமர்நாத் பனி லிங்க தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் செய்ய நாடு முழுவதும் பெரிய அளவில் காத்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் நேற்று இரவு அமர்நாத் ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. இரவு 9 மணிக்கு புக்கிங் தொடங்கியதுமே நாடு முழுவதும் அமர்நாத் கோவில் வலைத்தளத்தில் ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் செய்ய அதிகம் பேர் முண்டி அடித்தனர்.
இதனால் அந்த வலைத்தளம் திணறியது. ஹெலிகாப்டர் புக்கிங் செய்யக் கூடிய நடைமுறைகள் மாற்றப்பட்டு விட்டதால் பலரும் நேரடியாக புக்கிங் செய்யத் தெரியாமலும் அவதிப்பட்டனர். குறிப்பாக ஹெலிகாப்டர் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய கூடிய வலைப்பக்கம், வழக்கமான அமர்நாத் வலைத்தளத்தில் எங்கு இருக்கிறது என்று கூட பெரும்பாலான பக்தர்களுக்கு தெரியவில்லை.
தெரிந்தவர்களுக்கும் அதில் புக்கிங் செய்யக் கூடிய நடைமுறைகள் கடினமாக இருந்தது. ஆயினும ஹெலிகாப்டர் டிக்கெட்டுகள் நிமிடத்துக்கு நிமிடம் தீர்ந்து கொண்டே இருந்தது. பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய பேமெண்ட் கேட் வே வழியாக பணம் செலுத்தினாலும் டிக்கெட் கிரியேட் ஆகவில்லை என தெரிவித்தனர்.
டிக்கெட் புக்கிங் செய்யும் போதே வலைப்பக்கம் Error ஏற்பட்டு பலருக்கும் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போனது. இரண்டாவது முறை புக்கிங் செய்ய முயன்றாலும் ஏற்கனவே ஆதார் பதிவு செய்யப்பட்டதாக நிராகரித்தது.
இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. புக்கிங் இவ்வளவு சிரமம் இருந்த அதே நேரத்தில் சில மணி நேரங்களில் யாத்திரையின் முதல் 20 நாட்களுக்கான ஹெலிகாப்டர் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாதவர்கள் மீண்டும் புக்கிங் செய்ய முயலக் கூடிய login option முழுமையாக வேலை செய்யவில்லை. அதுவும் பக்தர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
ஹெலிகாப்டர் டிக்கெட்டுகளை தேதி மாற்றம், உறவினர்ககளுக்கு மாற்றிக் கொடுக்க கூடிய வசதிகள் மற்றும் login option ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.