சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணை கைதிகள் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக சிறை அதிகாரிகள் தயார்படுத்துவார்கள். எந்த கைதி நீதிமன்றம் செல்ல வேண்டுமோ, அவர்களை சிறையில் இருக்கும் மைக் மூலம் அழைப்பார்கள். இவ்வாறு அழைக்கப்படும் கைதி, உடனடியாக வர வேண்டும். அவர்களை அழைத்துச் செல்ல தயாராக இருக்கும் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள்.சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த கைதிகளை அழைத்துச் செல்ல ஆயுதப்படை போலீசார் தயாராக இருப்பார்கள். இதன்படி காலை திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த விசாரணை கைதியை சிறை அதிகாரிகள் மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் 2 மணி நேரமாகியும் வரவில்லை.இதையடுத்து அவரது அறைக்கு சென்ற வார்டன்கள், மைக்கில் அழைத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அப்போது அந்த கைதி, சிறை அதிகாரிகள் தன்னை அடித்துவிட்டதாக சட்டையை கழட்டி மாஜிஸ்திரேட்டிடம் காட்டினார்.இதையடுத்து உடனடியாக சிறை ஜெயிலரை நீதிமன்றத்திற்கு வருமாறு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் ஜெயிலர் மதிவாணன் ஆஜரானார். அவர், 'நான் ரவுண்ட்ஸ் போய்விட்டேன். எனக்கு எதுவும் தெரியாது' என்றார். இதையடுத்து கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. பொறுப்பு கண்காணிப்பாளரான வினோத் ஆஜரானார்.அவர், 'நீதிமன்றம் செல்ல பல முறை அழைத்தும் வராமல் இருந்தார். நேரில் சென்று அழைத்த வார்டனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அவரை சிறை ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கிறோம்' என்றார். அவருக்கு அறிவுரை கூறிய நீதித்துறை நடுவர், 2 வழக்கில் கைதாகியிருந்த கைதிக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். பின்னர் கைதி சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இச்சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.