கோவையில் ரேஷன் கடைகளில் கடந்த இரு மாதங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வழங்கப்படுகின்ற அரிசி கெட்டுப்போய் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்கள் வாங்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா.லோகு வெளியிட்ட செய்தி குறிப்பில், 'கோவையில் பல நியாய விலை கடைகளில் குறிப்பாக சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ஒண்டிப்புதூர் சூலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை மூட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டு கடைகளில் வழங்கப்பட்டது.
ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளை பிரித்து பார்க்கும் பொழுது அவை தரமற்றவையாகும். சில மூட்டைகளில் கெட்டுப் போன அரிசி இருப்பதை கண்டு ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரியிடம் தெரிவித்த போது அவர்கள் பெற மறுத்து வருவதாகவும் இதனால் கெட்டுப்போன அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாலும் அவை பொதுமக்கள் வாங்க முன் வராததால் கால்நடை தீவனமாக கோழிப்பண்ணைகளுக்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் கெட்டுப்போன அரிசியை வைத்திருப்பதால் அபராதம் விதிக்கப்படுவதாகும் ஆனால் கெட்டுப் போன அரிசி திரும்ப பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் தெரிவிக்கிறார்கள் அதுபோல சர்க்கரை லாரியில் கொண்டு வரும் பொழுது தார்ப்பாய் போடாமல் பாதுகாப்பில்லாமல் மழையில் நனைந்து சர்க்கரை மூட்டைகளை கடைகளில் இறக்கி சென்றுள்ளனர்.
அந்த மூட்டைகளை பிரித்துப் பார்க்கும்போது சர்க்கரை அனைத்தும் கெட்டியாக கற்கண்டாக மாறி உள்ளதால் இவை பயன்படுத்த முடியாமலும் சரியாக எடை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு கோவையில் பல இடங்களில் கெட்டுப்போன அரிசிகள் மற்றும் உருண்டை வடிவான சக்கரைகளை திரும்ப பெற அதிகாரிகள் மறுத்து வருவதாக கடை ஊழியர்களை புகார் தெரிவித்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவை முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளை ஆய்வு மேற்கொண்டும் கெட்டுப்போன அரிசிகளை திரும்ப பெற மறுக்கும் தமிழ்நாடு நுகர்வோர்கள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தரமான அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா. லோகு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்