காதர் பேட்டை பனியன் மார்க்கெட்டில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.
பனியன் தொழிலுக்கு பெயர் பெற்ற திருப்பூரில் காதர் பேட்டை பகுதி இரண்டாம் தர பனியன் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு புகழ் பெற்ற பகுதி ஆகும். இங்கு உள்ள வீதிகளில் 500 ககும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் உள்ளன.
திருப்பூர் இரண்டாம் தர பனியன் விற்பனை அங்காடியாக செயல்பட்டு வரும் காதர்பேட்டையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் வந்து பனியன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஆன்லைன் மூலமாகவும் வர்த்தகம் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இதில் நஞ்சப்பா பள்ளி எதிரில் 50 கடைகள் சேர்ந்த பனியன் பஜார் உள்ளது. தற்காலிக ஷெட்டுகளில் 50 பனியன் கடைகள் இயங்கி வந்தன.
இன்று பனியன் பஜாரில திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 9.30 மணியளவில் ஒரு கடையில் ஏற்பட்ட இந்த விபத்து வேகமாக பரவியது. கடைகள் முழுமையாக எரிந்து கொண்டு இருக்கிறது.
மேலும் கடைகளில் இருந்த பல கோடி மதிப்புலான பனியன்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. சுமார் 1 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் காரணமாக திருப்பூர் நஞ்சப்பா பள்ளி பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு உள்ளனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர்ச்சியாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டிட கடைக்கும் தீ பரவியது. கிட்டத்தட்ட இரவு 11.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.