ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.
இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.
வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.
அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா
கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..
தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும்என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர்
இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
வைகையாற்றில் பக்தர்கள் இறங்குவதற்காக வைகை ஆறு ஒட்டிய தடுப்பு சுவர்களின் அருகே 4 இடங்களில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.