கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

 திருமண கோலத்தில் மணமேடையில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருக வணங்கினர்.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த 30ம் தேதியும், அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் மீனாட்சியம்மன் திக் விஜயம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்களால் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

கோவில் வடக்கு ஆடி- மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சரியாக 8.35 மணியில் இருந்து 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் தங்கை மீனாட்சியை சொக்கநாத பெருமானுக்கு பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார். பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையோடு கலந்து கொண்டார்.

மணப்பெண் மீனாட்சியம்மனுக்கு முத்துக்கொண்டை போட்டு தங்ககீரிடம், மாணிக்க மூக்குத்தி, தங்ககாசு மாலை, பச்சைக்கல் பதக்கம் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டும், மணமகனான சுந்தரேஸ்வரர் பட்டு வஸ்திரத்தில் எழுந்தருளி பவளங்கள் பதித்த கல்யாண கீரிடம், வைரம் பதித்த மாலைகள் அணிவிக்கப்பட்டன.

முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் திருமண விழா தொடங்கியது. சுவாமி அம்பாள் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு  காப்புகட்டும் வைபவமும், மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும்  வைபவம், பட்டு சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டிய பின்னர் சிவாசார்யர்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க, திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மீனாட்சியம்மன் சார்பில் ஒரு பட்டரும், சுந்தரேஸ்வரர் சார்பில் ஒரு பட்டரும் மாலை மாற்றி தங்க மாங்கல்யத்தை அணிவித்தனர்.வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டதை கண்டு பக்தர்கள் மனமுருக அம்மனையும், சுவாமியையும் வழிபட்டனர்.

மீனாட்சி திருக்கல்யணத்தின் போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருந்த மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர். இந்த திருக்கல்யாண நிகழ்வை கோவிலுக்குள் 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசித்தனர்.

மீனாட்சியம்மான் திருக்கல்யாணத்தையொட்டி சுமார் 1 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி்தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

இன்று இரவு ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கில் மீனாட்சியம்மனும், யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் எழுந்தருள உள்ளனர். விழாவின் பாதுகாப்பிற்காக 3ஆயிரம் போலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Previous Post Next Post