கேதர்நாத் ஹெலிசேவை எப்போது தொடங்கும்? மலைப்பாதையில் பனிப்படலம் அகற்றும் வேலையும் தீவிரம்!

இமயமலையில் 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது கேதர்நாத் கோவில். ஜோதிர்லிங்க கோவிலாக இருக்கும் இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டிலும் உறைபனியால் மூடப்பட்டு விடுவதால் மே மாதம் முதல், நவம்பர் மாதம் வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுக்கிறார்கள்.

இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிற கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களும் நான்கு புண்ணியதல யாத்திரை (சார்தாம் யாத்ரா)  என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்த நான்கு புண்ணிய தல யாத்திரைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வருகிற ஏப்.25 ஆம் தேதி கேதர்நாத் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. ஏப்.27ல் பத்ரிநாத் கோவில் திறக்கப்படுகிறது. இது தவிர கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியும் இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது.

கேதர்நாத் கோவில் 13 ஆயிரம் அடி உயர பனிமலையில் அமைந்துள்ளதால், அந்த கோவிலில் சாமிதரிசனம் செய்ய சுமார் 19 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கும். இங்கு குதிரைகளிலும், பாணி எனப்படும் பல்லக்குகளிலும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இது தவிர ஹெலிகாப்டர் சேவையும் இயக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கேதர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் பனிமழையானது யாத்திரை ஏற்பாடுகளில் தொய்வு ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் மாநில அரசு மலைவழிப்பாதையை சீரமைத்தல், பனிப்பாறைகளை அகற்றுதல், அடிப்படை வசதிகளை செய்தல் போன்ற வேலைகளை வேகமாக செய்து வருகிறது. பனிப்படிமங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 

குறித்த நாளில் யாத்திரைக்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான வசதிகள் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுதவிர ஹெலிகாப்டர் சேவையை பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. கள்ளமார்க்கெட்டில் அதிகளவில் ஹெலிகாப்டர் டிக்கெட்டை விற்பதை தடுக்க ஐ.ஆர்.சி.டி.சி., உடன் இணைந்து ஹெலிகாப்டர் டிக்கெட் ஆன்லைனில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெலி சேவைக்கான இணையதளமும் திறக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 4-ல் ஹெலிகாப்டர் புக்கிங் தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஏப்ரல் 5 ல் புக்கிங் தொடங்கும் என உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரி ரவிசங்கர் அறிவித்து இருந்தார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஹெலிகாப்டர் சேவைக்கான முன்பதிவுகள் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

இன்று தொடங்கும் நாளை தொடங்கும் என பக்தர்கள் ஹெலி டிக்கெட்டுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 

ஹெலிசேவை வெப்சைட்: https://heliyatra.irctc.co.in/ 

-----------------------------------------------------------------------------------------

Previous Post Next Post