பணிநிரந்தரத்தை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்திருந்த பகுதி நேர ஆசிரியர்கள் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் வரை எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் சென்னையிலுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு, தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் முன்னோட்டமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.பணிநிரந்தரம் கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் திங்கட்கிழமை மனு அளித்தனர். ’’சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.’’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.