பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2012 முதல் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் நாங்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என சந்தோசப்பட்டோம்.கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கான பணிநிரந்தர அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்.இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது எங்களுக்கான நல்லதொரு அறிவிப்பு வரும் என்று ஆவலோடு 12,000 ஆசிரியர்களும் காத்திருந்தோம்.ஆனால் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எங்களைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது கண்டு மனம் வேதனை அடைகிறோம்.
வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் வேலைக்கு செல்வதால் எங்களுக்கு பள்ளியிலும்,சமூகத்திலும் ஏன் வீட்டிலும் கூட மரியாதை இல்லை.எனவே உடனடியாக பணிநிரந்தரம் செய்ய இயலாத பட்சத்தில் தற்காலிக தீர்வாக ஊதியத்தை உயர்த்தி அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலையாவது வழங்குங்கள் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.அமைச்சரும் எங்கள் கோரிக்கை குறித்து நம்பிக்கையான வார்த்தைகளை அளித்தார்.அமைச்சரின் வார்த்தைகளை நாங்களும் முழுமையாக நம்பினோம்.ஆனால் எங்களின் நம்பிக்கை பொய்த்து போனது.
எனவே திமுக தனது தேர்தல் அறிக்கை வரிசை எண் 181 ல் சொல்லி உள்ளபடி எங்களது பணிநிரந்தரத்தை உடனே அறிவிக்க கோரி வருகின்ற 5/4/2023 முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.பகுதிநேரம் என்ற சொல் ஒழியும் வரையில் எங்களின் பட்டினிப் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
.