பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை இருப்பதாகவும் இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கேட்டுக்கொண்டு உள்ளார். பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்வதுடன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதாசிவம் சட்டபேரவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர முடியும் என்ற விதி வகுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஏறக்குறைய 90 சதவீத பத்திரிகையாளர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற உறுப்பினராக சேர முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால், பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கமே நிறைவேறாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, ஊடக அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தொடங்கி, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அளவில் பணியாற்றும் செய்தியாளர்கள் வரை அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். இதனை முதலமைச்சர் கவனிக்க வேண்டும்." என்றார்.
பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த அவர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், "நாட்டின் 4 வது தூணாக பத்திரிக்கை துறை விளங்குகிறது. ஆனால், பத்திரிகையாளர்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு வீட்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்தையும் அரசே இலவச கல்வியாக கொடுக்க வேண்டும். என்றும் தன்னலமின்றி உழைக்கும் பத்திரிக்கையாளர்களை அரசு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்." என்றார்.