சென்னை பழவந்தாங்கல் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின்போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர்.
பழவந்தாங்கல் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் பங்குனி மாத தீர்த்தவாரி பூஜை, இன்று காலை மூவரசம்பேட்டை கோயில் குளத்தில் நடைபெற்றது.
மொத்தம் 25 தன்னார்வலர்கள் கோயில் குளத்தில் வைத்து சுவாமி சிலையை பூஜித்தபோது ஒருவர் நீரில் மூழ்க அவரை மீட்க முயன்று அடுத்தடுத்து 10 பேர் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அவர்களில் 5 பேரை உடனிருந்தவர்கள் மீட்க மற்ற 5 பேரை சடலமாக தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மீட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா இரண்டு லட்சம் உதவித் தொகையை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.