தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர் ஒருவர் நமக்கு அனுப்பிய கடிதம் இது... தமிழக அரசின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012 மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் சுமார் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களை இவர்கள் பயிற்றுவிக்கிறார்கள். இவர்கள் தினமும் மூன்று மணி நேரம், வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் மட்டுமே இவர்களது பணி.
தொடக்கத்தில் ரூ.5,000 சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தேர்ல் நேரத்தின்போதும் முறையே ரூ.7,000, ரூ.7,700 என தற்போது ரூ.10.000 மட்டுமே ஊதியமாக பெற்று வருகிறார்கள். பலர் இறந்ததாலும், ஓய்வுபெற்றுவிட்டதாலும் சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இப்போது குறைந்த ஊதியமாக இருந்தாலும், எதிர்காலத்தில் எப்படியும் அரசு தங்களை பணி நிரந்தரம் செய்து விடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் தற்போது ஒருங்கிணைந்த கல்வித் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தங்களை பணி நிரந்தரம் செய்ய அழுத்தம் கொடுத்து வந்தனர். மாவட்டம் விட்டு மாவட்டம், தொலைதூர ஊர்களிலிருந்து பணிக்கு வருவதால் ஊதியத்தின் பெரும்பகுதி போக்குவரத்து செலவுக்கே சென்றுவிடுகிறது என்பதால், பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போதுவரை பல்வேறு ஆண்டுகளாக பணியிட மாறுதல் கோரிக்கையினையும் அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக அரசு இவர்களுக்கு கொடுத்த மூன்று வாக்குறுதிகளில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியும், பணியிட மாறுதலையும் அமல்படுத்தி உள்ளது. தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த பணிநிரந்தரம் என்பது தாமதமாகும் பட்சத்தில் இடைக்காலத் தீர்வாக மூன்றாவது வாக்குறுதியான அனைத்து வேலை நாட்களும் முழுநேரப்பணி வழங்கி, ஊதிய உயர்வும் வழங்கி, தொகுப்பூதியத்திற்கு மாற்றும் அறிவிப்பை நடைபெற உள்ள 2023-2024 நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) வெளியிடுவார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்
மேற்காண் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஆசிரியர் மனசு' திட்டத்திற்கு பல ஆசிரியர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து, இவர்களது கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்ததோடு, இரண்டு முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நேரில் அழைத்துச்சென்று, கோரிக்கைகள் குறித்து விளக்கினார். அமைச்சரும் எங்களது கோரிக்கைகளை உடனே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
தமிழக அரசின் இன்றைய பட்ஜெட்டிலாவது நல்லதொரு அறிவிப்பு வரும் என சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கடைசி நம்பிக்கையாக விதி எண் 110 கீழ் நிச்சயம் அறிவிப்பார்கள் என நம்பியிருக்கின்றனர். அதிலும் அறிவிப்பு இல்லையெனில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுடன் இணைந்து பணி புறக்கணிப்பு, சான்றிதழ் எரிப்பு, முதலமைச்சர் இல்லத்தின் முன்பு அறவழிப்போராட்டம், பள்ளிக்கல்வி இயக்குநரகம் முற்றுகை, தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட தீவிர போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.