திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் 14 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர்.
சத்யாவை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குழந்தையை கடத்தி சென்றார். இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி ஆணையர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை வெளியிட்டும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். திருமணமானதில் இருந்து15 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லாததால், பாண்டியம்மாள் திட்டமிட்டு குழந்தையை கடத்தியது தெரியவந்தது. பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் 14 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். குழந்தை அதன் தாய் சத்யாவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.