திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி பின்புறம், எட்டு ஏக்கரில் விரிவான விளையாட்டு மைதானம், 400 மீட்டர் தடகள மைதானம் அமைக்க முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக ஒன்பது கோடி ரூபாய், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடக்கிறது.
கடந்தாண்டு திருப்பூர் வருகைதந்த அன்றைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இந்த இடத்தை ஆய்வு விபரங்களை கேட்டறிந்தார். ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு மண் ஓடுபாதை அமைக்கப்படுவதாகவும், அதில் தேசிய, சர்வதேச தடகள போட்டியை நடத்த முடியாது என்பதால் கைவசமிருக்கும் ஒன்பது கோடி நிதியை கொண்டு செயற்கை இழை தடகளப்பாதை அமைக்கவும், கூடுதல் நிதி தேவைப்பட்டால் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.
தற்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றபின் எங்கெங்கு தடகள மைதான பணிகள் நடைபெறுகிறது, போதிய நிதிவசதியின்றி மெதுவாக பணிகள் நடைபெறும் மைதானங்கள் & அதன் விபரங்களை கேட்டறிந்து துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது இப்பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மண் பாதையா? அல்லது செயற்கை இழை (சிந்தடிக்) ஓடுபாதையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது தடகள ஓடுதளம், பார்வையாளர்கள் அமரும் கேலரி, கூட்ட அரங்கு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைப்பதன்மூலம் வீரர்களின் ஓட்ட நேரம் துல்லியமாகக் கணக்கிடப்படும். மண் ஓடுபாதையில் ஓடுவதால் மாநில, தேசிய, தடகளப்போட்டிகளுக்கான தகுதிப் புள்ளிகளைப் பெறுவதில் நிச்சயம் சுணக்கம் ஏற்படும். தடகள வீரர்களின் திறமை முழுமையடையாது. மேலும் மாவட்டத்திற்கென தடகள மைதானம் அனைத்துவித பயிற்சிக்கூடங்களுடனும், பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் கூட்ட அரங்குகளுடனும் அமைத்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என
விளையாட்டு அமைப்புகள், தடகள வீரர்கள், தடகளப்பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.