ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாடு , தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது ரகமத்துல்லா என்பவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது ரகமத்துல்லா சையது அகமது. 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்ற இவர் அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று ரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான தூய்மை தொழிலாளரை முகமது ரகமத்துல்லா சையது அகமது கத்தியால் குத்தி உள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து இரண்டு போலீசார் அவரை நெருங்கினர். அப்போது அவர்களையும் அகமது கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நெஞ்சில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ரகமத்துல்லா உயிரிழந்தார்.
இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில், நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித், கூறுகையில் அகமதுவை சுடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
“இந்த அதிகாரிகளுக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இது அதிர்ச்சிகரமானது. எங்கள் காவல்நிலையத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம்,” அவர்கள் எதிர்வினையாற்ற மிகக் குறைந்த நேரமே இருந்தது," என்று அவர் கூறினார்.
மேலும் அவர் விசாரணைக்கு உதவ பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு கொண்டுவரப்படும் என்று ஸ்மித் கூறினார்.