குறைந்த செலவில் கேதர்நாத் பயணம்!

 தமிழ்நாட்டில் இருந்து 3000 கி.மீ., தூர வாகன பயணம்., இமய மலையில் 19 கி.மீ., தூர நடைப்பயணம்., 12 ஆயிரம் அடி உயரத்தில் உடலை உறையச் செய்யும் மைனஸ் குளிர்.,  இத்தணை சிரமங்களை கடந்தும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துச் சென்று தரிசிக்கும்  சிவன் கோவில் தான் கேதர்நாத் கோவில்.. உலகம் முழுவதும் இருக்கும் இந்து சமயத்தினர் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். 



உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவாலிக் மலைத்தொடரில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருக்குதுங்க கேதர்நாத் கோவில்.,  கேதர்நாத் கோவில் பஞ்சபாண்டவர்கள் காலத்தில் உருவான கோவில். இந்த கோவிலில் கேதாரீஸ்வரர் முக்கோண வடிவிலான லிங்கமா இருந்து பக்தர்களுக்கு அருள் கொடுக்கிறார்ங்க.., 

இமயமலையில் மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில்.


சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் இந்த கோவிலும் ஒன்னுங்க. இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் சொல்றாங்க., ஆதிசங்கரர் காலத்துல கோவில் புனரமைக்கப்பட்டிருக்கு., 

 இந்தியா முழுவதும் இருக்குற 12 ஜோதிர்லிங்கத்தில் கேதார்நாத்கோவிலானது 5வது ஜோதிர்லிங்க கோவில்ங்க.., மேலும் பஞ்சகேதாரக் கோவில்களில் கேதார்நாத் கோவிலும் ஒன்னா இருக்குதுங்க., இதனால நாடு முழுவதும் இருந்து., வந்து குவியும் பக்தர்கள், அவங்களோட லைப் அச்சீவ்மெண்ட்டா நினைச்சு இந்த கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுறாங்க., 


 வட இந்தியாவில் இந்த கோவில் எப்படா திறப்பங்கன்னு காத்திருந்து லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்திடறாங்க.. நம்ம தமிழ்நாட்டுல் இருந்து கேதர்நாத்  கோவிலுக்கு நிறைய பேர் போயிட்டு வர்றாங்க.,  ஒவ்வொரு வருஷமும் அக்‌ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் மாதம்) திறக்கப்படும் கேதர்நாத் கோவில், தீபாவளி நாள் வரை(நவம்பர்)  பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்து இருக்குதுங்க., தீபாவளி முடிஞ்சதும் பனிப்பொழிவு அதிகமாயிடும்ங்கறதால பொதுமக்களை தரிசனத்துக்கு அனுமதிக்கறது இல்ல.., 


கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்படும் காலத்தில் கூட கடும் பனிப்பொழிவு, மழை, ஹை ஆல்டிட்டியூட் என்று சொல்லப்படுகிற அதிக உயரத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினை எல்லாம் தாண்டித்தான் பக்தர்கள் இங்கு வந்து சாமி கும்பிடுறாங்க., 


பச்சிளங்குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் தம்பதியர், ஜோடியுடன் வரும் காதலர்கள், பெற்றோருடன் வரும் நடுத்தர வயதினர், தன்னந்தனியாக வரும் முதியவர்கள் என பல்வேறு வயதினரும் கேதர்நாத் தரிசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் படையெடுக்குறாங்க.,, நம்ம தமிழ்நாட்டு பிரபலங்கள் பலரும் கேதர்நாத் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்ய்றத வழக்கமா வச்சிருக்காங்க., 


இப்படி, தமிழ்நாட்டில் இருந்து கிட்டத்தட்ட  3 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு அந்தப்பக்கம் இருக்கிற கேதார்நாத் கோவிலுக்கு போயிட்டு வர்றது எப்படி? 


எவ்வளவு செலவாகும்? எந்தமாதிரி தயாராகி செல்ல வேண்டும்ங்கறதா எல்லாம் சொல்றது தான் இப்ப நம்மளோட நோக்கம். 

சிக்கனமா போகணும் அப்படிங்கறதுக்கான பயணத்திட்டம் இது., அதனால எப்படி கம்மி செலவுல கேதர்நாத் போயிட்டு வரலாம் அப்படிங்கறத இங்க சொல்லிருக்கோம்., 


கேதர்நாத் கோவிலுக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டா, முதலில்  5 முதல் 9 நாட்கள் நமக்கு விடுமுறை இருக்கணும்., 

  சென்னையிலிருந்து டெல்லிக்கு பிளைட்ல போயிட்டு, மற்ற இடங்களுக்கு டிரெயின்லயும் பஸ்லயும் போயிட்டு வர்றதுன்னா 5 நாள் போதும்.,  

இல்லை என்னால அவ்வளவு செலவு பண்ண முடியாதுன்னு நினைக்கிறீங்களா? நீங்க அழகா டிரெயின்ல கூட போயிட்டு வரலாம். அதுக்கு 4 நாள் ஜாஸ்தி ஆகும்.


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, மற்ற எல்லா ஊரையும் விட வடக்குப் பகுதியில் இருப்பதால் சென்னையிலிருந்து எப்படி போயிட்டு வர்றது அப்படிங்கறத பார்க்கலாம்.  மற்ற ஊர்க்காரங்க, சென்னைக்கு வரக்கூடிய ஒரு நாளை இந்த பயணத்திட்டத்துல சேர்த்துக்கங்க., 


கேதர்நாத் பயணம் என்பது சென்னைக்கு வருவதற்கும், சென்னையிலிருந்து பிளைட்டில் டெல்லி வருவதற்கும் சேர்த்து ஒரு நாள்; 


டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு 8 மணி நேரம், பின்னர் அங்கிருந்து சோன் பிரயாக்கிற்கு 10 மணி நேரம் என இரண்டாம் நாள்.


சோன் பிரயாக்கில் இருந்து மலையேற ஒரு பகல்., இரவு மலையில் தங்கலாம்-இது மூன்றாம் நாள்.


சாமிதரிசனம் செய்து விட்டு, திரும்ப இறங்கி, ஹரித்துவார் வந்து தங்கலாம் -இது நான்காம் நாள்.


ஹரித்துவாரில் கிளம்பி மதியம் ரயிலில் டெல்லி வரலாம்; அதே நாளில் டெல்லியில் இருந்து பிளைட் மூலம் சென்னை வரலாம்- இது ஐந்தாம் நாள். 


இப்படி வேறு எந்த பகுதிக்கும் செல்லாமல் கேதார்நாத் கோவிலுக்கு மட்டும்போயிட்டு வர முழுமையாக 5 நாட்கள் ஆகுதுங்க., 


இன்னும் ஒன்னு ரெண்டு நாட்கள் கூடுதலாக திட்டமிட்டால், உத்தரகாண்டில் இருக்கிற நிறைய விஷயங்களை சுத்தி பார்த்துட்டு வரலாம். 


கேதர்நாத் பயணம் செல்ல முடிவு செய்து விட்டாலே கடும் மலை ஏற்றத்தை நியாபகம் வச்சுக்கங்க., அதுக்காக ஒரு மாசமாவது அசைவம் ஏதும் சாப்பிடாமல் கொஞ்சம் வெயிட்டை கட்டுக்குள் வச்சுக்கிட்டு, தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போறது நல்லது., அப்படி பண்ணினா மலை ஏற்றம் ஈசியா இருக்கும்., இல்லாவிட்டாலும் பரவாயில்லை., கொஞ்சம் மெதுவா மலை ஏறலாம் அவ்வளவு தான் வித்தியாசம். 

இருந்தாலும் ஒரு விஷயம் நியாபம வச்சுக்கங்க., ‘அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி’ அப்படின்னு ஒரு லைன் சொல்வாங்க., நீங்க கேதர்நாத் மட்டுமில்ல, எந்த சிவன் கோவிலுக்கு போறதுனாலும், ஆண்டவன் விரும்பினால் தான் போயிட்டு வர முடியும்ன்னு சொல்லுவாங்க., அதனால் உங்களை ஈசன் அழைக்கும்போது எந்தளவுக்கு பக்தியுடன் போகணுங்கறது உங்களுக்கே தெரியும்.  ஹை ஆல்டிட்யூட்ல (High Altittude) இருந்தாலும், இந்த கோவிலுக்கு வடநாட்டில் பிறந்த பச்சிளங்குழந்தைகளை கூட தூக்கிட்டு போறாங்க., 3, 4வயசு குழந்தைகள் சளைக்காமல் நடந்து  மலை ஏறுறாங்க., 60க்கும் மேற்ப்பட்ட வயதுடைய 70, 80 வயதினர் கூட மெதுவா நடந்து மலையேறி வர்றாங்க., அதனால கேதர்நாத் கோவிலுக்கு போக முடிவு பண்ணிட்ட பக்தியை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு பயத்தஒ ஒதுக்கிடுங்க.,


இப்போ நம்ம பயணம், திங்கள்கிழமை இரவு ஆரம்பிக்கறதா வச்சுக்குவோம்., திங்கள் கிழமை இரவு தமிழ்நாட்டின் எந்த ஊரில் இருந்தாவது சென்னைக்கு வரணுங்க., நீங்க தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தேனி, மதுரை ஊர்களா இருந்தாலும் சரி, மேற்கு பகுதிகளான கோயம்பத்தூர் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், ஊட்டி, கரூர் போன்ற ஊர்களா இருந்தாலும் சரி, இல்ல திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை, விழுப்புரம், கிருஷ்னகிரி, மாவட்டங்களை சேர்ந்தவங்கள்ன்னாலும் பரவால., செவ்வாய்க்கிழமை காலைல சென்னை வந்துரணும் அவ்ளோதான்., செவ்வாய்கிழமை, டெல்லி போற பிளைட்ல ஏறணும்., இதுக்கு காலைல 9 மணியிலருந்து மாலை 6 மணிக்குள்ள எதாவது ஒரு பிளைட் நீங்க ஏற்கனவே புக் பண்ணிருப்பீங்க இல்லியா., அந்த பிளைட்ல இரவு 9 மணிக்குள்ள டெல்லி ஏர்போர்ட் வந்துரணும்.


அப்படி வந்துட்டீங்கண்ணா ஓகே., அவசரப்பட்டு டெல்லி ஏர்போர்ட்ல காசு கொடுத்து சாப்பிடாதீங்க., 

பில் எகிறிடும். 4 இட்லிக்கு 300 ரூபா காலி பண்ணிடுவாங்க பாத்துக்கோங்க., பிளைட் இறங்கியதும், நிஜாமுதீன்க்கு ஒரு ஓலா டேக்சி புக் பண்ணிங்கன்னா 500 ரூபாய் ஆகும். 500 ரூபாய்க்கு அரை மணி நேரத்துல நீங்க நிஜாமுதீன் ரயில்வே ஸ்டேசன் முன்னால இருப்பீங்க., அங்க இருக்கிற ஏதாவது ஓட்டல்ல சாப்ப்ட்டுக்கோங்க., ஒரு ஆளுக்கு 100 ரூபாய்க்குள்ள சாப்பிடலாம். 

சாப்பிட்டு முடிச்சதும் நைட் 11.50 மணிக்கு ஹரித்துவார்க்கு டிரெயின் இருக்கு., இந்த டிரெயின்க்கு நீங்க ஏற்கனவே புக் பண்ணிருக்கணும். அப்புறம் மிஸ் பண்ணாம ஏறிடுங்க., அதுல 3rd ஏ.சி., மட்டும் தான், ஸ்லீப்பர் எல்லாம் கிடையாது. அதனால ஏ.சி., பெர்த்ல ஒரு 4 மணி நேரம் தூங்குனா போதும், சரியா அடுத்த நாள் அதாவது புதன்கிழமை காலை 4 மணிக்கு ஹரித்துவார் வந்திடலாம். 


ஹரித்துவார் ரயில்வே ஸ்டேசன் வந்து இறங்கியதும், ஒரு முக்கா கி.மீ., தூரம் நடந்தாலே கங்கை கரையோரம் இருக்கிற கங்கா தேவி கோவில் வந்துரும். இல்ல நடக்க முடியாதுன்னா வெளில வந்து ஒரு ஆட்டோ பிடிங்க.,  3 பேருக்கு 100 ரூபா கேட்பாங்க., அழகா கங்கா தேவி கோவில் வந்து இறங்கிடலாம், இறங்கியதும்,கங்கையில் குளித்து விட்டு, கங்கா தேவியை கும்பிடுங்க., 

கும்பிட்டு ஒரு ஆறு மணிக்குள்ள நீங்க வெளில வந்துரலாம். வந்ததும்., ஒரு ஆட்டோ பிடிச்சு, பஸ் ஸ்டாண்ட் போகணும்னு சொன்னா கொண்டு போய் விட்டுருவாங்க., 3 பேருக்கு 100 ரூபாய் தான்., அதிலும் நிறைய ஆட்டோக்காரங்க ஒரு ஆளுக்கு 20 ரூபாய் தான் வாங்குவாங்க., இந்தி தெரிய வேண்டியது பெரிய பிரச்சினையா இருக்காதுங்க., நாம பேசுறத பெரும்பாலும் புரிஞ்சுக்குவாங்க.,  

ஆட்டோல ஏறி கேதர்நாத் கிளம்பக்கூடிய பஸ் நிக்குற பஸ் ஸ்டாண்ட் வந்ததும், நீங்க ஏற்கனவே புக் பண்ணி இருக்கிற பஸ் டைம் பார்த்து பஸ்ல காலை 7 மணிக்கு ஏறி உட்கார்ந்தா போதும், ஒரு 252 கி.மீ., தூரம்  பஸ் பயணம். 

 செய்து, சோன்பிரயாக் அப்படிங்கற இடத்துக்கு 10 மணி நேரம் கழிச்சு கொண்டு வந்து விடுவாங்க., 

போற வழியெல்லாம் பார்த்தீங்கன்னா கங்கை ஆற்றையொட்டியே உங்க பயணம், அற்புதமாக இமயமலையின் சிலுசிலு காத்து ஒரு 2 மணி நேரத்துக்கு சொகமா இருக்கும். அப்புறம் மொரட்டு குளிர் குளிரும். அதுக்கு தகுந்த மாதிரி ஸ்வெட்டர், ரெயின் கோட் எல்லாம் கொண்டு போயிடுங்க., இது மட்டுமில்லை., மலைப்பாதையில போற பஸ் சுத்தற சுத்துல சும்மா போறவங்களுக்கு கூட தலை சுத்தி வாந்தி வரும். அதனால வாமிட் வராம இருக்க டேபிளட், வந்தா எடுக்கறதுக்கான ஐடியா எல்லாம் பண்ணிக்கிட்டிங்கன்னா நல்லது. 

காலைல 7 மணிக்கு மேல பஸ் கிடையாது. சீசனை பொறுத்து பஸ் விடறாங்க., நல்ல கூட்டம் இருந்துச்சுன்னா மதியம் வரைக்கும் பஸ் கிடைக்கலாம்., இல்லேன்னா நீங்க தனியா தான் அரேஞ்ச் பண்ணிக்கணும்., நீங்க குரூப்பா போனா பிரச்சினை இல்லை. 7 பேரை ஏத்திக்கொண்டு செல்லும் பொலிரோ வாகனத்துக்கு மேலே சோன்பிரயாக் கொண்டு சென்று விடுவதற்கு மட்டும் 6 ஆயிரம் ரூபாய் வாங்குறாங்க., பஸ்சை விட கம்பர்டபிளா இருக்கும்., பேமிலியா போறவங்க இதை டிரை பண்ணலாம்., 

இல்லை இந்த ஆன்மிக சுற்றுலாவுல கொஞ்சம் அட்வெஞ்சரும் பார்க்கணுமா, ஹரித்துவார், ரிஷிகேஷ்ல பைக் ரெண்டல் கிடைக்குது., உங்களோட ஒரிஜினல் ஐ.டி., மட்டும் கொண்டு போனா போதும், செக்யூரிட்டி டிபாசிட் 2 ஆயிரம் பிளஸ் 3 நாள் வாடகையை முன்னதாகவே வசூல் பண்ணிக்கிட்டு, பைக் தர்றாங்க., அதற்கான கடைகளும் நிறைய இருக்கு., உடம்புலையும் மனசுலையும் தெம்பு இருந்தா பைக் பயணத்தை டிரை பண்ணலாம்., இமயமலை குளு குளு காத்தும், கங்கை கரையோர பயணமும் செம்ம திரில்லா இருக்கும். ஹோண்டா ஏக்டிவாவுக்கு ஒரு நாள் வாடகை 500 ரூபாய், பல்சர் பைக்குக்கு 1000, புல்லட்டுக்கு 1400 ந்னு வண்டிக்கு தகுந்த மாதிரி வாடகை வச்சிருக்காங்க., 

பைக்ல போகும் போதும், முதல் ஒரு மணி நேரம் நம்ம ஊட்டி பயணம் மாதிரி இருக்கும், போகப்போக சேறும் சகதியான ரோடு, பக்கத்துல அதள பாதாள ஆறுன்னு செம்ம திரில்லா இருக்கும்., 


இப்படி பஸ், டாக்சி அல்லது பைக் மூலமாக சோன்பிரயாக் நோக்கிய இமயமலை வாகனப்பயணம் புதன்கிழமை மாலை வரைக்கும் ஆகும். போகும் வழியில தூரத்தில் மின்னும் பனிமலையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கும். 


பயணத்தின் இடையில் முதலில் வரும் ஊர் பார்த்தீங்கன்னா தேவப்பிரயாகை. இந்த ஊருல பாகீரதி நதியும், ஆலக்நந்தா ஆறும் இணைந்து கங்கையா உருவாகுறத பார்த்து ரசிக்கலாம். அப்புறம் ஸ்ரீநகர், ருத்ரப்பிரயாகை, குப்தகாசி ஊர்கள் எல்லாம் வரும்ங்க., மலைச்சராலில் எப்படித்தான் இவ்ளோ கஷ்டப்பட்டு வாழறாங்கன்னு நினைச்சுக்கிட்டே போகும் போதே பல இடங்கள்ல நிலச்சரிவு காட்சிகளை பார்க்கலாம்., இவ்வளவு உயர மலை ரோடுகள்ல இதுக்கு முன்னாடி நீங்க போயிட்டு வராததால எல்லாம் அதிசயமா இருக்கும். 

போற வழில டீசாப்பிட, லஞ்ச் சாப்பிட நிறுத்துவாங்க., எந்த கடைல சாப்பிட்டாலும் டீ சூப்பரா இருக்கும்., ரொம்ப சூடா மண் குவளைல தருவாங்க., பார்த்து குடிங்க, இல்லனா நாக்குல புண்ணாகிடும். அவ்ளோ சூடா தருவாங்க., இந்த ஊர்ப்பக்கம் பார்த்தீங்கன்னா., நிறைய பால் உற்ப்பத்தி நடக்குதுங்க., வடமாநிலங்கள்ல பெரும்பாலும் நல்ல பால்ல டீ போடுவாங்க., அப்புறம் எத சாப்பிட்டாலும் பால் பொருட்கள் நிறைந்து இருக்கும். 

  இப்படியாக போய் அன்று மாலையில் நீங்கள் சோன்பிரயாக்கில் பஸ்சில் இருந்து இறங்குவீங்க., இறங்கியதும் அறை எடுத்து தங்கி விட வேண்டும். ராத்திரில ஏற முடியாது. அடுத்த நாள் அதிகாலையே மலையேறனும்., அதனால சீக்கிரமாவே தூங்கிடுங்க., ஆனா காலைல 4 மணிக்கெல்லாம் அலாரம் வச்சு எந்திருச்சுடுங்க., அப்போதான் சோன்பிரயாக்கில் பக்தர்கள் கூட்டத்தில் வரிசையில் நின்னு பயோமெட்ரிக் பதிவு செய்து, காலை 6 மணிக்காவது மலை ஏறத்தொடங்க முடியும். 


இப்போ மூன்றாம் நாள் காலை அதாவது புதன்கிழமை காலைல நீங்க சோன்பிரயாக்கில் பயோ மெட்ரிக் செண்டர்ல வரிசைல நிக்கணும், நம்ம குழு போன நாளில் லட்சக்கணக்கில் கூட்டம்  காரணமா பயோமெட்ரிக் பதிவு பண்ணாம விட்டாங்க., ஆனால் எல்லா நாளும் பயோமெட்ரிக் பதிவு பண்ணிட்டு தான் விடுறாங்க., இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா? நீங்க 2 டோஸ் தடுப்பூசியும் போட்ட சர்டிபிகேட் காட்டணும்., அதனால தடுப்பூசி போட்ட சர்டிபிகேட், ஒரிஜினல் ஆதார் கார்டு கொண்டு போகணும், சர்ட்டிபிகேட் டவுன்லோடு பண்ண, பணம் அனுப்ப, பணம் எடுக்க, பிரிண்ட் எடுக்க என சோன் பிரயாக்கில் எல்லாக்கடையும் இருக்குதுங்க., மெடிக்கல் முதல் மளிகை வரைக்கும் எல்லாம் வச்சுருக்காங்க., 


தடுப்பூசி போடாதவங்களுக்கு அங்கேயே மூக்குல குச்சியை விட்டு, செக் பண்ணிட்டு தான் அனுப்பறாங்க, அதுக்கு எக்ஸ்ட்ரா 6 மணி நேரம் ஆகும். அப்படி ஆச்சுன்னா இந்த 5 நாள்ல நீங்க கேதர்நாத் பயணத்தினை முடிக்க முடியாது. அதனால மறக்காம தடுப்பூசி போட்டுக்கிட்ட பின்னாடி போறது தான் நல்லது.


இப்படியாக இந்த சோன்பிரயாக்கில் பயோமெட்ரிக் முடிந்த பிறகு கொஞ்சம் நடந்து முன்னே சென்றால், சின்ன கடைவீதி  ஒன்று வருகிறது. இங்கு நாம வாங்காம விட்ட ஸ்வெட்டர், மப்ளர், ஜெர்கின், ரெயின் கோட், கிளவுஸ், வாலினி ஸ்ப்ரே, இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டுமோ எல்லாத்தையும் வாங்கலாம்., நம்ம ஊரை விட விலை கம்மியாகத்தான் இருக்குது. வாங்கிட்டு பக்கத்துல இருக்கிற கவுரி குண்டத்து கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, தொடர்ச்சியாக நடந்தால் மந்தாகினி ஆற்றைக்கடக்கும் இரும்புப்பாலம் வருகிறது. இந்த பாலத்துக்கு பக்கத்துல நம்மள ஜீப் மூலமா கவுரி குண்ட் அப்படிங்கற இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க. ஜீப்பில் செல்ல ஒரு ஆளுக்கு 40 ரூபாய் வாங்கறாங்க., 


லொஜக், மொஜக் என்று அமுத்தி திணித்துக் கொண்டு 4 கி.மீ., சென்று மலையேற்றத்தின் ஆரம்ப இடமான கவுரி குண்ட் எனுமிடத்தில் இறக்கி விடுவார்கள். இறங்கியதும் சில்லிடும் குளிர்ல அப்படியே அன்னார்ந்து பார்த்தாக்க வானம் தெரியாது, இமயமலை தான் தெரியும்.,

 ஆத்தாடி என்னா ஹைட்டு என்று வாயை பிளக்காமல், இதுமாதிரி பல மலைகளை ஏறி செல்ல வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு, நடையை கட்டுங்க சார்.,  

 நடக்க முடியாது என்று முடிவு செய்தீர்களானால், கவுரி குண்ட்-இல் குதிரை வைத்துக் கொள்ளலாம்., இதற்கு மேலே போய் சாமி கும்பிட்டு விட்டு கீழே  வந்து இங்கேயே இறக்கி விடுவதற்கு 2500 ரூபாய்., குதிரை குலுங்கற குலுங்கு ஒத்துக்காதுப்பா என்று சொன்னால் ‘பானி’ எனப்படும் பல்லக்கில் கொண்டு சென்று விடுகிறார்கள். இது தவிர கூடையில் உட்கார வைத்து மேலே கொண்டு போய் விடுவாங்க., நம்ம சுஷாந்த் சின் கூட இப்படி கூடை சுமக்கற கேரக்டர்ல தான் ‘கேதார்நாத்” படத்துல நடிச்சாரு., கூடை, பல்லடக்கில் கொண்டு போய் விட்டு திருப்பி அழைச்சு வர 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாங்கறாங்க., எப்படி வசதின்னு முடிவு பண்ணிக்கோங்க., 


இதெல்லாம் கொஞ்சம் ரிஸ்கா இருக்குப்பான்னு நினைக்குறவங்க, சோன் பிரயாக் ல இருந்து ஹெலிகாப்டர் மூலமா கோவிலுக்கு போகலாம்.  ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் கோவில் சுமார் 1 கி.மீ., தூரம் இருக்குது., ஹெலிகாப்டருக்கு கோவிலுக்கு போறதுக்கு வர்றதுக்கும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் கட்டணம். இதுவும் ஆன்லைன்ல புக் பண்ணினா மட்டும் தான் கிடைக்கும். இல்லாமல் பிளாக்ல வாங்குனா இதே டிக்கெட் 15 ஆயிரம் வரைக்கும் விற்கிறார்கள்.


சரி நாம நடைப்பயணத்துக்கு வருவோம்,  கவுரி குண்டில் ஆரம்பிச்சுஅப்படியே மந்தாகினி ஆற்றங்கரையில் இமயமலையில் நாம் நடக்க ஆரம்பிக்கையில் ரம்மியமாக இருக்குது மனசு., இமயமலை மீது நடக்கிறோம் என்ற அந்த நினைப்பே நமக்கு எக்கச்சக்க சந்தோஷமா இருக்கும். 

அந்த அத்துவானக்காட்டுலயும், மலை ஏற்றப்பாதை முழுக்க கான்கிரிட்டாலும், கல்லாலும் பாதை போட்டிருக்கார்ங்க பாருங்க., உத்தரகாண்ட் கவர்மெண்ட பாராட்டியே ஆகணும்., 


மலை ஏறும் எல்லோருமே காலில் ஷூ போட்டுக்கிட்டு தான் ஏறுறாங்க., இல்லேண்ணா தரைல இருக்குற சில்னஸ் ஒடம்புல ஏறிடும்., அப்புறம் நேஷனல் ஜியாக்கிரபில வர்ற பியர் கிரில்ஸ் மாதிரி ‘ நான் இப்ப குளிர் தாக்குதல்ல சிக்கிக்கிட்டேன்., என் கால் மரத்துப்போச்சு” அப்படின்னு டயலாக் பேச வேண்டியது தான். பேசினாலும் யாருக்கும் புரியாதுங்கறது வேறு கதை.அதனால ஸ்வெட்டர், ஜெர்க்கின், கிளவுஸ், ஷாக்ஸ், ஷூ, அது தவிர எக்ஸ்டிரா ஒரு செட் நனையாத டிரஸ் இதெல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கங்க., 

கொண்டு வராதத சோன் பிரயாக்ல வாங்கிக்கங்க., 


கவுரி குண்டில் இருந்து சுமார் அரை மணி நேரம் நடக்கும் போதே இமயமலையின் மலை மடிப்புகள், தவழும் மேகங்கள், ஆங்காங்கே விழும் அருவிகள் ன்னு இயற்கையின் மடியில் அற்புத பயணம் அது., அனுபவித்து நடக்கலாம். நிலச்சரிவுகளை பார்க்கும் போது கொஞ்சம் பயம் வரும்., 


 கொஞ்சதூரம் நடக்க ஆரம்பிச்சதும் லைட்டா கால் வலிக்கும்,  இதுக்கு அப்புறம், ஒரு 4 கி.மீ., தான் படாத பாடு பட்டு நடக்க வேண்டும். அதுக்கப்புறம் அதுவே பழகிடும்.., 

முதல் 4 கிமீ., நடந்தால் ஜங்கிள் சட்டி என்ற இடம் வருகிறது. இங்கு வரிசையாக கடைகள் இருக்கிறது., மலையில் உள்ள எல்லாக்கடைகளிலும் ஆலு பரோத்தா, (நம்ம ஊர் ஆலு சப்பாத்தி) அப்புறம் மேகி கிடைக்கும். ஒவ்வொன்னும் 50 ரூபாய் தான்., அப்புறம் டீ சாப்பிட்டா 20 ரூபாய், வாட்டர் பாட்டில் 30 ரூபாய்., என விலையில் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. இத்தணை உயரத்துக்கு இந்த விலைக்கு கொடுக்குறாங்கன்னா பெரிய விஷயம் தான். இப்பிடி மலையெல்லாம் கடைகள் இருக்குது. திண்பண்டங்களுக்கு பிரச்சினை இல்லை. அதுக்காக நம்ம ஊர் ஐட்டம் எல்லாம் கிடைக்காது.  


அங்கங்க லைட்டா சாப்பிட்டுட்டு, மலைச்சரிவுகளை, அருவிகளை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். சீசனுக்கு சென்றால் நடந்து செல்பவர்களை குதிரைகள் விரட்டும், கடந்த அக்டோபரில் ஆயிரக்கணக்கான குதிரைகள் மலையேறின. குதிரைக்காரர்கள் விரட்டிய விரட்டுக்கு வேகமாக குதிரை நடக்குது.,  மேலே உட்கார்ந்திருக்கறவங்க தான் கஷ்டப்படறாங்க., 10 அடிக்கு ஒரு தடவ குதிரைக்கு கால் வழுக்குத்து, சில குதிரைகள் ஆட்கள சுமந்துகிட்டே விழுந்து எந்திருச்சு நடக்குது., சில குதிரைகள் ஏற முடியாம இருமுவதையும் மூச்சு வாங்கி செல்வதையும் பார்க்கலாம். இந்த மலைக்கு செல்லும் பக்தர்களை சுமக்கும் வரம் கேட்டு இந்த குதிரைகள் சுமந்து செல்வதாக சொல்றாங்க.,  


இந்த எடத்துல ஒன்னு சொல்லணும், இந்த மலைமேல ஓடற ஆறு பேரு மந்தாகினி ஆறுங்க., மந்தமா ஓடறதால மந்தாகினின்னு பேரு வந்ததா சொல்றாங்க., ஆனா பாருங்க பேரு தான் மந்தாகினி., முரட்டு ஓட்டம் ஓடுது., மலை பாதாளத்துல அந்த ஆறு பொங்கி வர்றத பார்க்குறதுக்கு இன்னும் நாலு கண்ணு வேணும்., அவ்ளோ மிரட்டலா பொங்கி வரும், அழகோ அழகு., சில இடங்கள்ல இந்த ஆறு அமைதியா ஓடுது.,


2013 ல கேதர்நாத் கோவிலுக்கு மேல் இருக்குற பனிமலைகள் வெடித்து பெருவெள்ளம் ஒன்னு உருவாச்சு., அதுல கோவிலுக்கு வந்த பக்தர்கள் 5 ஆயிரத்துக்கும் மேல இறந்துட்டாங்க., அதில பல பேரோட ஒடம்பு கூட கிடைக்கல., அவ்ளோ பெரிய சேதாரத்தையும் சமாளிச்சு, பாதைகளை மீட்டு, செப்பனிட்டு, அடுத்த ஆண்டே முழுசா பாதைகள் போட்டு பக்தர்களை அனுமதிச்சுருக்கு உத்தரகாண்ட் கவர்மெண்ட்., அது வேற லெவல் ஸ்பீடான வேலை தாங்க/,


 ஒரு வழியா கஷ்டப்பட்டு ராம் பாரா அப்படிங்கற எடத்துக்கு வந்தப்புறம் அங்க இருக்கற நிலச்சரிவை பார்த்தா, விக்கிக்கும்., கண்டெயினர் லாரி சைஸ்ல குவியல் குவியலா கல்லு சரிஞ்சு கெடக்குது., 

 கொஞ்சம் இறக்கமான பாதைன்னு பார்த்தா அதுக்கப்புறம் இன்னும் ஒரு பெரிய மலை ஏற்றம்., பாதைகள் ஒரு மலையில் வளைந்து வளைந்து ஏறுது., ஒரு மலை ஏறி முடிச்சதும் அடுத்த மலைக்கு அதே மாதிரி வளைஞ்சு., வளைஞ்சு., ஏறி ஏறி., மந்தாகினி ஆத்தோட ஓரத்துல அப்படியே போய்க்கிட்டே இருக்கும்., ஒரு வழியா சாய்ந்தரம் பேஸ் கேம்ப் வந்துடலாம். இந்த இடம் வந்ததும் நம்மள நாமளே பாராட்டிக்குவோம்., கஷ்டமான டிரெக்கிங்னு எல்லோரும் சொல்றாங்க ஆனாலும், அது ஒரு வகைல ஈசியான மலையேற்றம் தான்., நீங்க மலையேற முடிவு பண்ணிட்டா உங்களுக்கு கஷ்டம் இருக்காதுங்க., 


கோவில் இருக்கிற இடத்துக்கு 2 கிமீ., முன்னாடியே இருக்கிறது தான் பேஸ் கேம்ப்., கிட்டத்தட்ட சமதளம் போல இருக்கிற இந்த இடத்துல சீட் போட்ட கூரையில் தனித்தனி ரூம்கள் கொண்ட வீடுகள், நந்தி காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் அரசின் டார்மிடரிகள் இருக்கு., இங்கே வெளிச்சம் இருக்கும் போதே போய் சேர்ந்திருப்போம்.,  சீசன் கூட்டம் இல்லாமல் இருந்தால், கோவில் அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான லாட்ஜ்களில் ரூம் கிடைக்கும். சீசன் என்றால் கிடைக்காது. 

எனவே நடந்து செல்லும்போதே கூட்டத்துக்கு ஏற்ப, பேஸ் கேம்ப்ல் ரூம் புக் செய்து விட்டு, பிறகு மீண்டும் 2 கிமீ., மேலே நடந்தால், மாலை மங்கும் நேரத்தில் கலர் கலர் லைட்டிங்ல அப்படியே கேதர்நாத் கோவில் ஜொலிக்கும்.

 மெய்சிலிர்க்கும் இந்த காட்சியை காணத்தானே, இப்படி ஒரு நெடும்பயணம். நடையாய் வந்த பலருக்கும் கண்களில் நீர்மின்ன, மெய் சிலிர்க்கச் செய்கிறார் கேதாரீஸ்வரர்.

அப்படியே கோவில் வளாகத்தின் முன்பு உட்கார்ந்து மாலை நேர ஆரத்தி பார்த்து சாமி தரிசனம் செய்ய உங்களுக்கு கொடுத்து வச்சுருக்கு., எத்தணை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். ’ஹர ஹர மஹா தேவ் என்று விண்ணதிர சிவனை கூப்பிடறாங்க அந்த பகுதி மக்கள். நம்மையும் அறியாமல் ஓம் நம சிவாய! ந்னு வாய் அழைக்கிறது. 

கேதர்நாத் வந்தடைந்த திருப்தில அப்படியே கோவிலுக்கு உள்ளே போக வாய்ப்பு கிடைச்சா உள்ளே போகலாம்., இல்லேன்னாலும், காலைல கும்பிட்டுக்கலாம்னு ரூமுக்கு வந்துரலாம். கோவில் முன்னாடி ரூம் கிடைக்காத பலர் பேர் நெருப்பு மூட்டி குளிர் காயுறாங்க., வடக்கத்தி இளம்பெபெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் கூட ரூம் எடுக்காமல் மைனஸ் குளிரில்  கோவில் முன் அமர்ந்திருப்பதெல்லாம் ஆச்சரியம் தாங்க., 



சரி நாம ரூமுக்கு வந்துட்டோம், இப்போ உடனடியா தூங்கிட பலருக்கு தூக்கம் வர்றதில்ல., நம்ம ஊரு மெத்தை கணக்கா பெட்ஷீட் கொடுக்கறாங்க, அந்த பெட்ஷீட் பனி ஈரம் வெதும்பி கிடக்கும். ஆனாலும் குளிரு ஊடுருவி அடிக்கத்தான் செய்யும். பலருக்கு ஹை ஆல்டிட்டியூட் பிரச்சினைல தூக்கம் வராது. பலருக்கு மெய் மறந்து தூக்கம் வரத்தான் செய்ய்து., 


தூங்கியும், தூங்காமலும், வெள்ளிக்கிழமை அதிகாலைல எந்திருச்சு., மறுபடியும் தானே உருவான கேதாரநாதனை போற்றி வணங்கிட செல்லலாம். இந்த மலை உச்சியில ஓட்டல்களில் ஹாட் வாட்டர் எல்லாம் கிடையாது., ஜில் தண்ணி தான், குளித்து கொஞ்ச நேரத்தில் குளிர் போயிடும்.., குளிச்சிட்டு, கூட்டம் இல்லை என்றால் கோவிலுக்கு உள்ளே போய் ஐயனை தொட்டு கும்பிடவும், அபிஷேகம் பண்னவும் அனுமதிக்கிறாங்க., கூட்டம் இருந்தா 5 செகண்ட்ல சாமியை பார்த்துட்டு வர வேண்டியது தான்., 

கோவிலுக்கு உள்ளே போகும்போது, சாமி பேருக்கு அர்ச்சனை பண்றோம், சாமிகிட்ட வச்சு பூஜை பண்ணி பிரசாதம் தர்றோம்., அப்படின்னு இந்தில கேட்பாங்க., 100 ரூபாய் பணமும் வாங்கிட்டு, வெளியே வந்து மறுபடியும் பணம் கேட்பாங்க, அதனால் அர்ச்சனை பண்றேன்., பூஜை பண்றேன்னு வர்றவங்களை நம்பாதீங்க., அது அவங்க வயித்து பிழைப்புக்கு பண்றது..


 அப்புறம் வெளியே வந்து பனிமலையில் அழகை பார்த்து ரசிக்கலாம். 

வெளியில் கோவிலை ஒரு இரண்டு மணி நேரம் சுற்றி வந்து விட்டு, போட்டோ வீடியோ எல்லாம் எடுத்துக்கிட்டு, மீண்டும் ஒருமுறை நல்ல படியாக சாமி கும்பிடலாம்.,

  

பின்னர் கிளம்பி கீழே இறங்க ஆரம்பித்தால் 5 மணி நேரத்தில் இறங்கிடலாம்., ஸ்லோவா வந்தால் கூட 6 மணி நேரம் தான்., அதாவது வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கெல்லாம் கீழே வந்து விடுவோம். மிக மெதுவாக நடந்தாலும், மாலைக்குள் இறங்கலாம். 


இறங்கி அதே மாதிரி கவுரி குண்டில் ஜீப் பிடித்து சோன் பிரயாக் வர வேண்டும். பின்னர் அங்கு ஏராளமான வாகனங்கள் கிடைக்கும்; கிடைக்கும் வாகனத்தில் ஹரித்துவார் நோக்கி பயனப்படலாம்.,பைக்கில் மலையேறி வந்தவர்கள் தங்கி விட்டு 5ம் நாள் அதிகாலையில் (சனிக்கிழமை) வண்டி எடுப்பது நல்லது. எப்படி ஆனாலும், சனிக்கிழமை காலை ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயிலை பிடித்தால், அதே நாள் மதியம் 3 மணிக்கெல்லாம் டெல்லி  போய் விடலாம், டெல்லியில் இருந்து ஏற்கனவே புக் பண்ணின பிளைட்ல ஏறி 3 மணி நேரத்தில் சென்னை வரலாம்.,


சென்னைல இருந்து தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் ஆறாம் நாள் காலை சென்று விடலாம். அதற்காக முன்னரே டிரெயின் புக்கிங் செய்து இருப்போம். அதனால் பிரச்சினை இல்லை. இந்த திட்டப்படி போயிட்டு வர்றது ரொம்ப டைட்டான பயணம்னு நினைச்சீங்கன்னா., கூட ஒரு நாள் கேப் விட்டு டிக்கெட் போட்டுக்கிட்டா ரொம்ப எளிமையாக இருக்கும்.

 

இதுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால், சென்னை செல்ல 500, சென்னை டூ டெல்லி பிளைட் ரூ.6000, 

டெல்லி டூ ஹரித்துவார் டிரெயின் 600, 

ஹரித்துவார் கங்கை கோவில் வகையில் ஆட்டோ உள்ளிட செலவு ரூ.300

 ஹரித்துவார் டூ சோன் பிரயாக் பஸ் ரூ.800 (கார் என்றால் ஒருவருக்கு 1000) 

சோன்பிரயாக்கில் தங்கிட ரூ.500.  கோவில் பேஸ் கேம்பில் தங்கிட ரூ.500  

என மொத்தம் ரூ. 9400,  செலவாகும். 

இதே போல திரும்பி வர தங்குற செலவை கழிச்சிட்டா 8500 ஆக மொத்தம் செலவு 17900.. 

இந்த செலவு 2023 வது வருஷம் மே மாசம் போறதுக்கான கணக்கு.. காலத்துக்கு தகுந்த மாதிரி செலவு அதிகமாகலாம்.

இந்த பயணத்துல பார்த்தீங்கன்னா எங்க போனாலும் ஆலு சப்பாத்தியும் பச்சரிசி சோறு கொஞ்சமும் கொடுக்கிறாங்க அதனால கஷ்டப்பட்டு செலவு பண்னினாலும் சாப்பாடு, டீ செலவு எல்லாம் ஒரு நாளைக்கு 500 ஆகாது.. அதை விட கம்மியா தான் ஆகும்.

 இருந்தாலும் ஒரு நாளைக்கு  500 கணக்கு போட்டு சேர்த்துக்கிட்டாலும் 5 நாளைக்கு 2500 தான் ஆகும்.,  

ஆக மொத்தமாக 2500 ஐயும் 10,400 ஐயும் சேர்த்தால் 12,900 ரூபாய் வருது.., 

இதுல நீங்க ஏற்கனவே 30  அல்லது 40 நாள் முன்னாடி பிளைட், டிரெயின் டிக்கெட்லாம் போட்டுருவீங்க., அதனால பிரிச்சு பண்ணும்போது செலவு பண்ண கொஞ்சம் ஈசியா இருக்கும். 


இதுல சென்னை டூ டெல்லிக்கு பிளைட் வேண்டாம் டிரெயின் போதும் என்று முடிவு செய்தால் டிரெயின் டிக்கெட் செலவு போக வர., 1500 ரூபாய் ஆகும்., சப்பாத்தியும் புளிச்சோறுமா கட்டிக்கிட்டு, டிரெயின்ல ஏறுனா 3500 ரூபாய் குறையும்., அதற்கு பதிலா இன்னும் 4 நாள் அதிகமாகும். 


இதாங்க கேதார்நாத் போயிட்டு வர்றதுக்கு சிக்கனமான அதே நேரம் விரிவான பிளான்., ஓம் நம சிவாய! வேறு எதாவது சந்தேகம்னா எங்களை கூப்பிடுங்க தகவல் சொல்றோம். போன் பண்ணுங்க., 


அவன் அருளால் அவன் தாழ் வணங்கிட புறப்படுங்க.., ஓம் நம சிவாய!

Previous Post Next Post