கச்சத்தீவில் புத்தவிகாரம் கட்டியதாக பாதிரியார் புகார்... கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த புத்த பிட்சுகள்... என்னப்பா நடக்குது அங்கே?

கச்சத்தீவில் புத்த விகாரங்களை இலங்கை அரசு கட்டியுள்ளதாக கூறியுள்ள  இலங்கை நெடுந்தீவு பகுதியை சார்ந்த பாதிரியார் வசந்தன்,  இதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.  இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு புத்த பிட்சுகள் வந்திருந்த காரணம் சமூக நல்லிணக்கம் இல்லையா? வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?  என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் மாதம் 3,4 தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவினை இலங்கை அரசு நடத்தியது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் சுமார் 10 ஆயிரம் பேர் திருப்பயணிகளாக கலந்து கொண்டனர். 


இந்த விழாவுக்கு வந்திருந்த இலங்கை நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பாதிரியார் வசந்தன், ‘கச்சத்தீவில் இரண்டு புத்த விகாரங்கள் கட்டப்பட்டு இருப்பதாக பிபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்து இருந்தார். அந்த விகாரங்கள் பனை ஓலை தட்டியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்றும், அந்த மறைப்புக்கு கடற்படையினர் காவல் நிறுத்தப்பட்டு இருந்தததுடன், அந்த இடத்துக்கு பக்கத்தில் கூடயாரும் அந்த பகுதியில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறி இருந்தார். 

5 அடி உயரத்தில் ஒரு புத்த விகாரமும், 3 அடி உயரத்தில் ஒரு விகாரமும் கட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கான புகைப்படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். 

மேலும், புத்தவிகாரங்கள் அமைக்கும் செயல் கச்சத்தீவின் வரலாற்றையே மாற்றும் செயல் என்றும் வசந்தன் கருத்துகளை தெரிவித்து இருந்தது பேசுபொருளாகி உள்ளது. தமிழ்நாட்டிலும் இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் நடந்த கச்சத்தீவு திருவிழாவில் புத்த பிட்சுக்கள் பங்கேற்ற காரணம் என்ன? என்று திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவில் வழக்கமாக வெள்ளை அங்கி அணிந்த பாதிரியார்கள் இருப்பார்கள். 

ஆனால் இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம் அருகிலேயே காவி உடை அணிந்த புத்த பிட்சுகள் வலம் வந்தார்கள். அவர்கள் அந்தோணியார் ஆலயத்தை அடிக்கடி சுற்றிப்பார்த்ததும், அங்கிருந்த முகாமில் தங்கி இருந்து கச்சத்தீவு திருவிழாவை பார்வையிட்டனர். மேலும், விழாவுக்கு வந்த பொதுமக்களுடன் அந்தோணியார் ஆலய பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. 

திருவிழாவின் போது சமூக நல்லிணக்கத்துக்காக புத்த பிட்சுக்கள் கலந்து கொண்டார்கள் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் கச்சத்தீவில் புத்த விகாரங்கள் கட்டப்பட்டு இருப்பதும்,   திருவிழாவில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு புத்த பிட்சுக்கள் பங்கேற்று இருப்பதும் கச்சத்தீவு பகுதியில் ஏதோ ஒரு ரகசிய திட்டம் நடைபெற்று வருவது போல் தோன்றுகிறது என்கிறார்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்ற இந்திய, இலங்கை திருப்பயணிகள்.

Previous Post Next Post