தூத்துக்குடியில் குடி போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் விபத்தின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடியிலிருந்து இன்றிரவு 7.40 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை பாதியில் நிறுத்தி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகளின் எதிர்ப்பால் நடத்துனர், டிரைவரிடம் சென்று பேசியுள்ளார்.அப்போது டிரைவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பப்பட்டனர். குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.