தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்ட நிலையில் பிப்.28) மற்றும் மார்ச் 1 ஆகிய தினங்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (மார்ச் 1 ) தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு சுமார் ஒரு மணி முதல் அதிகாலை 7 மணி வரை மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதேபோல் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து லேசான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரபட்டினத்தில் 20மிமீ மழை பதிவானது. திருச்செந்தூர் 19மிமீ, தூத்துக்குடி 16.5 மிமீ, சாத்தான்குளம் 14.2 மிமீ , ஸ்ரீவைகுண்டம் 12 மிமீ, காயல்பட்டிணம் 7 மிமீ, சூரங்குடி 5 மிமீ, வைப்பார் மற்றும் ஓட்டப்பிடாரம் 3 மிமீ, கீழ அரசடி 2 மிமீ, எட்டயாபுரம் 1.2 மிமீ ஆகவும் மழை அளவு பதிவாகியுள்ளது. பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இரவில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் , வானம் மேகமூட்டத்துடன் லேசான சாரல் பெய்து வருவதாலும் பள்ளி, கல்லுரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வழக்கம் போல விடுமுறை அறிவிக்கும் என எதிர் பார்த்திருந்த மாணவர்களும் , பெற்றோர்களும் விடுமுறை அறிவிப்பு வராததால் , சாரல் மழையில் நனைந்தபடி ஏமாற்றத்துடன் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழை காரணமாக பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.