'பல் பிடுங்கி பல்பீர் சிங்' விவகாரம் - 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை - பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவு.!

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் அவர் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறியதையடுத்து, அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

அதன்படி பாதிக்கப்பட்ட லெட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்தந்த கிராம வி.ஏ.ஓ.க்களுடன் நேரில் ஆஜராக சப்-கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். நேற்று பகல் முழுவதும் யாரும் வராமல் இருந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த திம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த லெட்சுமி சங்கர், ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதுவரையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 பேர் தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட உள்ளது. 

அதேநேரத்தில் பெரும்பாலானோர் விசாரணைக்கு ஆஜராக அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் சாட்சியம் அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே புகாரில் சிக்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post