மங்கலம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீஸ்காரர் குடும்ப பிரச்சினை காரணமாக தென்னை மர மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோட்டம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராகவும், பல்லடம் உட்கோட்டம் குற்றப்பிரிவிலும் பணிபுரிந்து வருபவர் ஜெகன்.
இடுவாயில் அண்ணாமலை கார்டனில் தனது மனைவி அனிதா, மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார்.நேற்று மாலை 7 மணியளவில் தனது மனைவி அனிதாவுடன் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டையிட்டு உள்ளதாக தெரிகிறது.அதன் பின்பு இடுவாய் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி கையில் வைத்திருந்த சல்ஃபாஸ் தென்னை மர மாத்திரையை மதுவில் கலந்து குடித்துள்ளார்.
பின்னர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் மதியழகன் என்பவரிடம் போனில் தகவல் சொன்னதின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருப்பூர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது குடும்ப பிரச்சனையின் காரணமாக விஷ மருந்து அருந்தி சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.