தூத்துக்குடியின் மையப்பகுதியில் புகழ்பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவில் அமைந்துள்ளது. வரும் சனிக்கிழமை 18-ம் தேதி சனி பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இரு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற பின், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்...
..சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும். அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும். அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிதில் வந்து தரிசனம் செய்து கொள்வதற்கான உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. உள்ளே வந்து, வெளியே செல்வதற்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து காவல்துறை மூலம் சீர்செய்யப்படும்.
இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த காலத்தில் நடைபெற்றதை விட இந்தாண்டு சிறப்பான முறையில் இரு நிகழ்வுகளையும் பக்தர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் சனி பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு அச்சமின்றி வந்து செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கோட்டுராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், மத்திய பாகம் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரியப்பன், கணக்கர் சுப்பையா மற்றும் ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.