திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள அரண்மனை காட்டுப்புதூர் ஆதி திராவிடர் காலணி பெண்கள் உள்பட சுமார் 30 பேர், வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலர் விஸ்வெஸ்வரன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திட்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் அரண்மனைக்காட்டுபுதூர் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் எங்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் MGNREGS திட்டத்தின் கீழ் திறந்த வெளிக்கிணறு அமைக்கப்பட்டு அதில் போதிய அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் ஆகிய நாங்கள் நமக்கு நாமே திட்டத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய நிர்வாக அனுமதி பெற்று தர வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரிடம் கடந்த 15.12.2022 அன்று பொதுமக்களின் மனு மற்றும் வங்கி வரைவோலை கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஊராட்சி மன்றத் தலைவரின் தீர்மானம் இவைகள் அனைத்தும் வழங்கியும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்மொழிவு அனுப்ப மறுத்து வந்தார்.
அதனால் 02.01.2023 திங்கள் கிழமை அன்று மனு நீதி நாளில் தங்களிடம் மனு அளித்து தாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமார் அவர்களை நேரில் அழைத்து உடனடியாக முன்மொழிவு அனுப்ப உத்தரவிட்டீர்கள். இதனால் எங்கள் மீது கோபம் கொண்ட வட்டார வளாச்சி அலுவலர் 03.01.2023 தேதியன்று போலியான புகார் மனுவினை அருகில் உள்ள சுப்பிரமணி என்பவரை வைத்து தயாரித்து அதற்கு உடந்தையாக வேறு ஊரைச் சார்ந்த இரண்டு நபர்களிடம் மட்டும் கையொப்பம் பெற்று பொது மக்கள் விண்ணப்பம் போல சித்தரித்த போலியான மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், கோட்டச்சியர் அவர்களுக்கும், திட்ட இயக்குனர்க்கும் அனுப்பியுள்ளார்கள். மேலும் இந்த போலியான மனுவினை வட்டாட்சியர் விசாரிக்காமல் மின் வாரியத்திற்கு அதிகார வரம்பை மீறி இணைப்பு வழங்குவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்புதல் பெறவும் என குறிப்பாணை அனுப்பியுள்ளார். வட்டாட்சியருக்கு கிணறு வெட்டப்பட்ட இடம் மேட்டுப்பாளையம் வருவாய் கிராமம் க.ச.எண்:450/1-ல் ஊராட்சிக்கு சொந்தமான இட்டேரி புறம்போக்கு என தெரிந்தும் அந்த பாதை தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை என தெரிந்தும், மின்சாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு கடிதம் வழங்கியுள்ளார். இவ்வாறு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாய மக்களாகிய எங்களின் மீது உள்ள சாதிய வன்மத்தினால் எங்களுக்கு குடிநீர் கிடைக்க கூடாது என்னும் நோக்கத்தில் சுப்பிரமணி மற்றும் வேறு இரண்டு நபர்களை வைத்து போலியான புகார் மனுவை தயாரித்து அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பியதுடன், வட்டார வளாச்சி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியராகிய தாங்கள் வழங்கிய நமக்கு நாமே திட்ட குடிநீர் பணிகளை செயல்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் திட்ட இயக்குனருக்கு தவறான தகவல் அளித்து தற்போது திட்ட இயக்குனர் நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கூறுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார். எனவே தொடர்ச்சியாக நமக்கு நாமே திட்டத்திற்கு முன்மொழிவு அனுப்பாமலும், போலியான புகார் மனுவினை தயாரித்தும், திட்ட இயக்குனருக்கு தவறான தகவல் வழங்கியும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கிய நிர்வாக அனுமதிக்கு ஒப்பந்தபுள்ளியை நிறுத்தி வைத்தும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமுதாயத்திற்கு எதிராக சாதிய வன்மத்துடன் செயல்பட்டுவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும், மேற்கொண்டு எங்களுடைய சமூக உரிமையை (CIVIL RIGHTS) பாதுகாத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்கள் பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில் தொகையை வங்கி வரைவோலையாக வழங்கி நிர்வாக அனுமதி பெறப்பட்ட பணிக்கு உடனடியாக ஒப்பந்தபுள்ளி கோர வேண்டுமாய் தங்கள் பாதம் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.