கோவை, திருப்பூர், ஈரோடு ரயில் பயணிகளை பாடாய் படுத்தும் ரயில்வே நிர்வாகம்... ரெகுலர் பயணிகளின் தீராத அவதி தீர்க்கப்படுமா?

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாநகரங்கள் பெரும் தொழில் நகரங்களாக இருக்கின்றன. மாவட்ட தலைநகரங்களாக உள்ள இந்த மாநகரங்களில் இருந்தும், அதனுள் இருக்கிற ஊர்களில் இருந்தும் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஊருக்கும் மாறி மாறி பல்வேறு வேலைகளுக்கு செல்கிறார்கள். அதாவது, சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோவை நகரங்களுக்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கும் தினசரி அலுவலக வேலைக்காகவும், கூலி தொழிலுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் ரயில் பயணம் விரைவாக இருப்பதாலும், சீசன் டிக்கெட் உள்ளிட்ட கட்டணச் சலுகைகள் காரணமாகவும் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணம் செல்கிறார்கள்.


அதிலும் குறிப்பாக கோவையிலிருந்து சேலம் வரை பெரிய ரயில் நிலையங்களுக்கு இடையில் பாசஞ்சர் ரயில்கள் நிற்கக் கூடிய சிறு ரயில் நிலையங்களாக இருக்கும் கிராம மக்களுக்கு ரயில் பயணம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

 இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ரயில்வேயின் திட்டமிடல், பராமரிப்பு மற்றும் தாமதம் காரணமாக ரயில் பயணிகளின் அன்றாட வாழ்க்கையும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இது குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் கூறியதாவது:
ரயில்வே நிர்வாகம் கோவை சேலம் இடைப்பட்ட ரெகுலர் ரயில்களை அட்டவணைகளை மாற்றி உள்ளது.
குறிப்பாக  கோவையிலிருந்து தினமும்  காலை 9.05 மணிக்கு கிளம்பி எல்லா சிறு ரயில் நிலையங்களிலும் நின்று சென்று கொண்டு இருந்த சேலம் மெமு பாசஞ்சர் ரயில் பல்வேறு காரணங்களை காட்டி 6 மாதமாக இயக்காமல் வைத்து இருக்கிறார்கள். அதே போல சேலத்திலிருந்து மதியம் 1.40 க்கு கிளம்பி மாலை 5 .15 மணிக்கு   கோவைக்கு வந்து கொண்டிருந்த மெமு  ரயிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு மாறி மாறி தினமும் சென்று வரக்கூடிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மாற்றாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலையிலும் இரவிலும் பயணித்துக் கொண்டு இருந்தனர்.  இப்போது மார்ச் 6 ந்தேதி வரை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் கோவை விருதுநகர் இடையே இயங்காது என அறிவித்து இருக்கிறார்கள்.
மெமு ரயிலும், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் இல்லாததால், காலை நேரத்தில் கோவையிலிருந்து கிளம்பி திருச்சி எக்ஸ்பிரஸ் மற்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஏற வேண்டி இருக்கிறது. அதிலும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சிங்கநல்லூர், சூலூர், இருகூரில் நிற்பதில்லை. பீளமேடு, வடகோவை மட்டுமே நிற்கிறது.  பஸ்சுக்கு இரண்டு மடங்கு கட்டணம் கொடுக்க வேண்டி இருப்பதால் அதிக செலவாகிறது. மாலை 5 மணிக்கு விட்டால் இரவு 9 மணிக்கு சூப்பர்பாஸ்ட் ரயில் மட்டுமே இருக்கிறது. அதற்கு சூப்பர் பாஸ்ட்க்கு 35 ரூபாய் டிக்கெட் கூடுதலாக எடுக்க வேண்டும்.
  நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 5.05 க்கு திருப்பூர்,  6.15  மணிக்கு கோவைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அந்த ரயிலிலும் இந்த மாதம்  ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது இரவு நேரத்தில் பணி முடித்து ஈரோடு, திருப்பூரில் இருந்து செல்பவர்கள் நிலை பெரும் திண்டாட்டமாக இருக்கிறது.  தினசரி இந்த நகரங்களுக்கு மாறி மாறி வேலைக்கு செல்லக் கூடிய அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே தென்னக ரயில்வே பயணிகளின் நலன் கருதி பழைய நேர அட்டவணையில் ரயில்களை இயக்கவும், நிறுத்தப்பட்ட மெமு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொங்கு மண்டலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், இரவு நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயங்குகிறது.  பகலில் சென்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டண ரயிலாக மாற்றப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 6 வரை அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு மேலும் ஒரு இரவு நேர ரயிலை தினசரி இயக்க வேண்டும். இடைப்பட்ட ரயில் நிலையங்களில் ரெகுலர் பயணிகள் பயனடையுமாறு மாற்று ரயிலாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். றைந்த மக்கள் தொகை கொண்ட கேரளாவுக்கு ஏராளமான ரயில்களை இயக்கும் ரயில்வே நிர்வாகம் தமிழக மக்களை எப்போதுமே வஞ்சித்து வருகிறது.  அதிக ரயில்களை கேரளாவுக்கு இயக்குகிறார்கள். அதிக நிறுத்தங்களிலும் நிறுத்தி மக்கள் பயன்பெறச் செய்கிறார்கள். அதே போல தமிழகத்திலும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களை இயக்கவும், தேவையான நிறுத்தங்களில் நின்று செல்லவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.
Previous Post Next Post