அங்கன்வாடி மையத்தை சுற்றி மாடுகள் இடும் சாணம் மற்றும் கோமியத்தால் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன், பக்கிள் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுநீராலும் தொடர்ந்து துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் ஒவ்வாமை, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,
மேலும் அங்கன்வாடி மையத்தில் தரைத்தளம் ஆங்காங்கே உடைந்து குழந்தைகளின் கால்களை பதம் பார்க்கும் ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகள் கழிவறைக்கு செல்ல தண்ணீர் வசதி இல்லை, இதனால் முன்பு 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயின்று வந்த நிலையில் தற்போது எண்ணிக்கை இருபதாக குறைந்துவிட்டது. பலர் தங்கள் குழந்தைகளை இங்கு அனுப்புவதற்க்கு அஞ்சி சுகாதாரமான வேறு அங்கன்வாடி மையத்திற்க்கு மாறி விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: அங்கன்வாடி மையத்தில் போதிய வசதிகள் இல்லை. படிக்கும் குழந்தைகளுக்கு, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை. தினமும் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு கழிவறை பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. குடிநீர் இல்லாததால் சமையலுக்கு தினமும் சுற்றியுள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து சமையல் செய்யப்படுகிறது.
மேலும் மேலும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கான ஊட்ட சத்துமாவு போன்றவை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் இந்த மையத்திற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சுகாதாரமற்ற தற்போதைய நிலையில் தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் இங்கு வருவது குறைந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி வேறு இடத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குழந்தைகள் படிக்க கூடிய மையம், சுகாதாரமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு சுகாதாரப்பணிகளை கவனிக்க கூட ஆளில்லை. கொசுத்தொல்லை மற்றும் தொடர் துர்நாற்றத்தில் இங்கு வரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர், ஆகியோரிடம் புகார் அளித்தும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழை குழந்தைகள் படிக்க கூடிய இடத்தை துாய்மை செய்ய அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது இதனால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தற்போது பலவிதமான தொற்று நோய்கள் பரவும் சூழலில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு அறிவுறுத்தும் நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வீட்டருகிலேயே சுகாதாரமற்ற சூழலில் அவரது துறை சார்ந்த அங்கன்வாடி மையம் செயல்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.