2014 வரை கௌதம் அதானி என்பவர் பற்றி குஜராத் தாண்டி இந்தியாவில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் மோடியின் நண்பராகத்தான் அவர் அறிமுகமானார். 2014 தேர்தல் பிரச்சாரங்களுக்கு மோடி முழுக்க முழுக்க அதானி நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில்தான் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அப்போதே மோடி-அதானி உறவுகள் குறித்து கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் மோடி பிரதமரானதும் அதானி குழுமம் அசுர வளர்ச்சி கண்டது. 'யாருப்பா இவரு?' என்று 2014ல் பல இந்தியர்களால் விசாரிக்கப்பட்டவர், ஒன்பதே ஆண்டுகளில் உலகின் மூன்றாம் பணக்காரர் என்ற புகழ் கொண்டு உயர்ந்தார். பல பத்தாண்டுகள் உழைப்பில் முன்னுக்கு வந்த பல நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அதானி குழுமம் தேசமெங்கும் பரவி விரவியது. மோடியால் அதானி வளர்ந்தாரா, அதானியால் மோடி வளர்ந்தாரா என்று பிரித்துப் பேச இயலாதபடி பின்னிப் பிணைந்தது அவர்களின் வளர்ச்சி.
அப்படிப்பட்ட குழுவில் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அரசல் புரசலாக விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் சொல்வதெனில் skeletons are falling out of the cupboard now.
அதற்கெல்லாம் மூல காரணம் ஹின்டன்பர்க் ரிசர்ச் எனும் பங்கு வர்த்தக மற்றும் ஆய்வு நிறுவனம். அதானி குழுமம் குறித்த இவர்களது சமீபத்திய ஆய்வறிக்கை அந்த நிறுவனம் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது:
* அதானி குழுமம் தங்களது அக்கவுண்டிங்கில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி இருக்கிறது. அவர்களது நிதி அறிக்கைகள் நம்பத்தகுந்தவை அல்ல.
* அதானி குழுமத்தின் பங்கு விலை செயற்கை முறைகளில் அதிகரிக்கப்பட்டு வைத்திருக்கப்பட்டிருக்கிறது. 2007ல் கேதன் பரேக்குடன் இணைந்து பங்கு வர்த்தகத்தை முறைகேடாக நடத்தியது பற்றி செபியே குறிப்பிட்டு இருக்கிறது. பின்னர் இந்திய அரசின் தலையீட்டின் மூலம் வெறும் அபராதத்துடன் தப்பித்தது.
* அதானி குழுமத்தின் கடன் விகிதம் அவர்களது நிறுவனத்தின் அளவுக்கு மீறி அதீதமாக இருக்கிறது. ஏதாவது ஒரு சிறிய, பெரிய பங்கு வீழ்ச்சியில் கடனை திருப்பும் கட்டாயம் நேரிட்டால் நிறுவனம் திவால் ஆகி விடலாம்.
* சில குறிப்பிட்ட அந்நிய தேசங்களில் shell companies எனப்படும் லெட்டர் பேட் நிறுவனங்களை நிறுவி அவற்றின் மூலம் தங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிதியை சுழற்சி செய்கிறார்கள்.
* ஐக்கிய அமீரகத்தில் ஒரு சின்ன குடியிருப்பில் இயங்கும் நிறுவனம் ஒன்று அதானி குழுமத்துக்கு ஒரு பில்லியன் டாலர் வரை கடன் அளித்துள்ளது .
* Wash Trading என்று அழைக்கப்படும் பங்கு வர்த்தக முறைகேட்டை பயன்படுத்தி பங்கு விலையை தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி கையாள்கிறார்கள்.
* பல்வேறு அந்நிய தேசத்து லெட்டர் பேட் நிறுவனங்கள் மூலம் பொய்யான ஆர்டர்களை தருவித்து அவர்கள் மூலம் பெற்ற நிதியைக் கொண்டு பொய்யாக அதிக வருவாயை அதிகரித்துக் காட்டுகிறார்கள்.
* தங்களது public limited நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டங்களை தங்கள் private limited நிறுவனங்களுக்கு கைமாற்றி அவற்றை அங்கே கழட்டி விட்டு தப்பிக்கிறார்கள்.
* எட்டு ஆண்டுகளில் அதானி குழுமத்துக்கு ஐந்து நிதி மேலாளர்கள் (CFO) வந்து போயிருக்கிறார்கள். அதாவது யாராலும் நின்று எதிர்கொள்ள இயலாத அளவுக்கு நிலைமை பயங்கரமாக இருக்கிறது.
* தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக எழும் விமர்சனங்களை மத்திய அரசின் உதவியுடன் அடக்குமுறைகள் கொண்டு நிறுத்துகிறது அல்லது தடுக்கிறது.
இன்னும் இந்தப் பட்டியல் போய்க் கொண்டே இருக்கிறது. இதன் விளைவு,இரண்டு நாட்களில் அதானி குழுமத்தின் பங்கு சந்தையில் சுமார் 18.3% வீழ்ந்திருக்கிறது. அந்த நிறுவனம் பங்குகள் வைத்திருக்கும் LIC போன்றவற்றின் பங்குகளும் விழுந்திருக்கின்றன.
ஹின்டன்பர்க்கின் ரிப்போர்ட்டுக்கு அதானி குழுமம் ஒரு எதிர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அதில் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. பொத்தாம் பொதுவான விளக்கங்கள். Motherhood statements எனப்படும் கோஷ வரிகள்தான் இருக்கின்றன. சட்டரீதியில் புகார்களை எதிர்கொள்வோம் எனும் வீராப்பும் இருக்கிறது. 'ஆஹா அதைத்தான் எதிர்பார்க்கிறோம். தயவு செய்து கேஸ் போடுங்க பிளீஸ்!' என்று ஹின்டன்பர்க் பதில் அறிக்கை வெளியிட்டு முஷ்டியை மடக்கி இருக்கிறது. அதானிகள் செய்ய மாட்டார்கள். காரணம் ஹின்டன்பர்க்கின் வரலாறு அப்படி. 2017ல் நிறுவனம் துவங்கிய காலம் தொட்டு பல்வேறு நிறுவனங்களை அடித்து காலி செய்திருக்கிறது. வழக்கு என்று போட்டால் ரிப்போர்ட் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்க தங்கள் நிதி அறிக்கைகளை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டி வரும். அப்போது ஊரே அந்த அறிக்கைகளை பரிசீலிக்கும். மடியில் கனம் இல்லாதவர் கண்டிப்பாக ஒரு வாரத்துக்குள் ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடும். அதானி குழுமம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
அது ஒரு புறம் இருக்க, இந்த சர்ச்சையில் குறிப்பிட வேண்டிய ஒன்று இருக்கிறது. இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பாஜகவினர் பலரும் கனத்த அமைதி காக்கிறார்கள். அல்லது பொதுவாக ஏதாவது பேசுகிறார்கள். 'தீர விசாரிக்கணும்', 'அமெரிக்க சதி', 'ஹின்டன்பர்க் ஒரு பங்கு சந்தை manipulator. அவன் சுயநலத்துக்கு ஏதாவது சொல்வான்!' என்றெல்லாம் மையமாக பேசுகிறார்கள்.
அதாவது இந்தியாவின் ஆகப்பெரிய நிறுவனம் கண்டமேனிக்கு சட்டவிரோதமாக நடந்து வருகிறது. நிதி மோசடிகள் செய்து வருகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு அதிர்ச்சிகரமாகவே இல்லாதது போலத் தோன்றுகிறது. உங்க நீதி, நேர்மை, தேச பக்தி எல்லாம் என்ன ஆச்சு பாஸ்? கறுப்புப் பொருளாதாரத்துக்கு எதிராக மாபெரும் போரை அறிவித்து ரிக்சாக்காரர் முதல் கூலித் தொழிலாளி வரை எல்லாரையும் தெருவில் நிற்க வைத்தீர்களே? இப்போது உங்கள் மூக்குக்கு அடியிலேயே ஒருத்தன் கறுப்புப் பொருளாதாரம் இல்லை, கறுப்பு சாம்ராஜ்யமே நடத்தி வருகிறாரே? அது குறித்து எள்ளளவு கூட கோபம் வராமல் 'தீர விசாரிக்கணும்!' என்கிறீர்களே? தீர விசாரித்து, வழக்கு நடத்திதான் பாமர இந்தியர்களை அவர்களது கறுப்புப் பணத்தை (!) மாற்றிக் கொள்ள கியூவில் நிற்க வைத்தீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் வராது. இவர்களை விட முக்கியமாக இது குறித்து அதிர்ச்சி அடைய வேண்டியவர் அதானியின் உற்ற நண்பரும் தேசத்தின் அதிகார மையத்தில் அமர்ந்திருப்பவருமான பிரதமர். அதானி குழுமம் பிரதமரின் நேரடி ஆசியில் மற்றும் கண்காணிப்பில் இயங்கும் நிறுவனம். உலகத் தலைவர்கள் தங்களது ராஜரீகப் பயணங்களில் தங்கள் மனைவியரை கூடவே அழைத்துச் செல்வார்கள். ஏறக்குறைய அந்த அளவுக்கு ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகள் தன் அந்நியப் பயணங்களில் எல்லாம் மோடி அதானியை கூட்டிச் சென்றிருக்கிறார். அறிக்கை குறிப்பிடும் அதானியின் முறைகேடுகள் எதுவுமே பிரதமருக்குத் தெரியாது என்றால் அவரது அறிவுத் திறன் மற்றும் மேலாண்மைத் திறன் இரண்டையுமே சந்தேகிக்க வேண்டி இருக்கும். எனவே, தனது உற்ற நண்பர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அவரது கடமை.
ஆனால் அவர் எதுவுமே பேச மாட்டார். சீனா, ஜிடிபி சரிவு போன்ற அரசாங்க மேட்டர்கள் பற்றியே அவர் பேசியதில்லை. இது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள 'பிரைவேட் விஷயம்'. அதையெல்லாம் பேசுவாரா என்ன?
ஆனால் யாரும் எங்கும் எதுவும் பேச வேண்டிய அவசியம் இன்றி காய்கள் நகர்த்தப்படும் என்று கணிக்கிறேன். அதானி குழுமம் கண்டிப்பாக ஹின்டன்பர்க் மீது வழக்குத் தொடர மாட்டார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சி இன்னும் சில நாட்கள் தொடரும். அதற்குப் பின் அமைதியான சில பல நடவடிக்கைகளில் அதானி குழுமம் காப்பாற்றப்படும். ஓரிரு மாதங்களில் 'பார்த்தாயா, வெள்ளைக்காரனின் அந்நிய சதியை முறியடித்து விட்டோம்!' என்று தேச பக்தர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் வழக்கம் போல தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கலை, மசூதியில் தேசியக் கொடியை ஏற்றவில்லை, என்றெல்லாம் இதர அதிமுக்கிய விஷயங்களில் நாட்டு மக்களிடையே தேசபக்தியை நிலை நாட்டும் பணியை செவ்வனே தொடர்வார்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்