அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்
உலக கோடீஸ்வரர் பட்டியலில் 24வது இடத்திற்கு தொழில் அதிபர் கவுதம் அதானி சரிந்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கை வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் அதானி குழும பங்கு விலைகள் சரிந்து வருகின்றன.கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்து விட்டது. கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33, 297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த அதானி 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் 5% சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 கோடி வீழ்ச்சியடைந்தது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் இன்றும் 5% சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. ஜனவரி 24ம் தேதி ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடிக்கு கீழ் சென்றுவிட்டது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.34 குறைந்து ரூ.653 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.7 குறைந்து ரூ.148 ஆகவும் உள்ளன.அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.56 குறைந்து ரூ.1,071 ஆகவும் உள்ளன.அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.50 குறைந்து ரூ.1,133 ஆகவும் உள்ளன. அதானி வில்மர் நிறுவன பங்கும் ரூ.20 குறைந்து ரூ.393 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி என்டர்ப்ரைஸ்ர்ஸ் பங்கு ரூ.44 குறைந்து ரூ. 1,674 ஆக உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு ரூ.7 குறைந்து ரூ.336 ஆகவும் ஏசிசி பங்கு விலை ரூ.4 சரிந்து ரூ.1,819 ஆகவும் சரிந்துள்ளது. இதனிடையே அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.