புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்ந்த பிலிப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் 15 பேர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டம் தொட்டியம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விட்டு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கதவனைக்கு வந்தனர்.
மாயனூர் கதவணை அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, கதவணையை சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் ஆனந்தமாய் குளித்து விளையாடி உள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி மூழ்கி உள்ளார். அதை பார்த்து காப்பாற்ற சென்று 7 மாணவிகள் நீரில் சிக்கி தத்தளித்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி, ஏழாம் வகுப்பு மாணவி சோபியா, ஆறாம் வகுப்பு மாணவிகளான இனியா மற்றும் லாவண்யா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
அவர்களுடன் வந்த கீர்த்தனா என்கிற கிருத்திகா என்ற மாணவி தண்ணீரில் மூழ்கிய மூன்று பேரை துணிச்சலாக காப்பாற்றி கரை ஏற்றி இருக்கிறார். இதனால் அவர்கள் மூன்று பேரும் தப்பித்தனர்.
மாணவிகள் நீரில் மூழ்கி பலியானதை அடுத்து செய்வதறியாத திகைத்த ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் வந்து இறந்த மாணவிகளின் உடலை மீட்டனர். சிறு பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்பி சுந்தரவனம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.
உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
வெயில் காலம் ஆரம்பிக்கிற நிலையில் இளம் வயதினர் நீர் நிலைகளில் குளிக்க செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.