இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென்று இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை MLA கண்டனம் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:-
"இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென்று இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பேசுயிருக்கின்றார். மேலும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரே கட்சியின் போன்று சித்திரத்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்றுள்ளது தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சு.
உலக வரலாற்றில் இந்திய சுதந்திர போரில் பங்கு பெற்றவர்களின் வரலாறு பதியப்பட்டுள்ளன. அதில் எங்காவது சங்க்பரிவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் ஒருவர் பெயராவது எழுதப்பட்டுள்ளதா? அவர்கள் சுதந்திரத்திற்கு ஒரு தும்பையும் கிள்ளிபோடாதவர்கள். சிறிய முயற்சி கூட எடுத்துக் கொள்ளாதவர்கள். மேலும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக்கொடுத்த நயவஞ்சகர்கள். சிறைக்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, ஆங்கில அரசிடம் பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் வாரிசுகள் இப்படிதான் பேசுவார்கள்.
நாளை 23.01.2023 சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளை ஆர்எஸ்எஸ் பாஜக கொண்டாட கூடாது, அவர்களுக்கு அந்த தகுதி இல்லை என்று நேற்றே (22.01.2023) முகத்தில் அறைந்தால் போல் கூறிவிட்டார் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மகளான திருமதி.அனிதா போஸ் அவர்கள். மேலும், அவர் கூறுகையில் ஆர்எஸ்எஸ்-பாஜக வின் கொள்கைகள் ஒருபுறம் என்றால் அதற்கு நேரெதிரானது தனது தந்தையின் கொள்கைகள். இரண்டும் இருதுருவங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு (2022) குடியரசு தினவிழாவில் வ.உ.சி, பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம் பெறாமல் மறுக்கப்பட்டதுதான் இந்த ஒன்றிய அரசின் சாதனை. ஆளுநர் அவர்கள், இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறார், ஆனால் அனைத்தையும் உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எத்தனை முறை குட்டுப்பட்டாலும், பழைய குருடி.... கதவை திறடி...! என்ற கூற்றுக்கேற்ப ஆளுநர் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. வரலாற்றை திரிப்பது சங் பரிவார் அமைப்புகளுக்கு புதியது ஒன்றுமில்லை.
ஆனால் ஆளுநர் அவர்கள், இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றவேண்டும் என்று பேசுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அவரின் இந்தப் பேச்சிற்கு எனது வன்மையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனம் போனபோக்கில் ஆளுநர் இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.