தூத்துக்குடியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டிகளை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று (22.01.2023) காலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் நமது உடல் ஆரோக்கியம் தான் நமது பாதி சொத்து, எனவே நீங்கள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் இளைஞர்கள் ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்"என்ற உறுதி மொழி ஏற்று போதைக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும்.
சிலர் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி தொடர்ந்து உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களது உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். மேலும் இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈசி பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி கராத்தே பயிற்சியாளர் இமானுவேல் வரவேற்புரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், பிஎம்சி பள்ளிகளின் முதல்வர் ஜோசப் ஜான் கென்னடி, எஸ்ஏவி பள்ளி தாளாளர் பாலாஜி, உமா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் சரவணகுமார், மாநில மூத்தூர் தடகள செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் இம்மானுவேல், ஜெயக்குமார் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.