தமிழ்நாடு v/s தமிழகம் சர்ச்சையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்தார். குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஆளுநர் அனுப்பியுள்ள அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்றே தற்போது குறிப்பிட்டுள்ளார். தமிழகம் என்ற வார்த்தையை கைவிட்டு விட்டார்.
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை படிக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து தேசியகீதம் பாடும் முன்பே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில், தமிழக ஆளுநர் என்றும், தமிழ்நாடு முத்திரைக்கு பதில் ஒன்றிய அரசின் முத்திரையும் இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் ஜனாதிபதியை சந்தித்து தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான புகாரை வழங்கினர்.
இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று வந்த பிறகு தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்திருந்தார். அப்போது, ‘‘தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற நான் முயற்சி செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாடு என்று அழைப்பதற்கு நான் எதிரி அல்ல’’ என்று கூறி இருந்தார். மேலும் பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில். வரும் 26-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முக்கிய விஐபிக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில், ‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி’ என்றே அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் அனுப்பியுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு முத்திரையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களின் எதிர்ப்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்து விட்டார் என்றே கூறப்படுகிறது. ஆனால் ஆளுனரின் 'தமிழகம்' என்ற பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து முட்டு கொடுத்த அனைவரும் என்ன சொல்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும், தமிழகம் என்ற வார்த்தையை ஆளுநர் கைவிட்டதால், தமிழ்நாடு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.