தேவையற்ற சோதனைகளால் தாமதமாகும் விமானங்கள் - மதுரை விமான நிலையத்தில் சிரமத்திற்க்கு உள்ளாகும் பயணிகள்.!

 

மதுரை விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளிடம் ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில் தனியார் நிறுவன செக்யூரிட்டிகளை நியமித்து பயணிகளை சோதனையிடுவது, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுவதுடன் , விமானங்கள் புறப்பாடும் தாமதமாவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக செயல்படுகிறது. உள்நாட்டு பயணிகள் வருகையில் திருச்சியை விட மதுரை விமான நிலையத்தில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் வருவது மதுரையில் அதிகம். 


இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தில் முன்னர் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக இருந்த போதும் பயணிகளுக்கு தேவையற்ற தாமதம் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது ஊழியர்களின் மந்தமான பணி மற்றும் தேவையற்ற சோதனை மூலம் பயணிகள் சிரமத்திற்க்கு ஆளாவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

வழக்கமாக நுழைவு வாயிலில் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வைப்பர். பின்னர் விமான நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஆவணங்களை சரி பார்த்து போர்டிங் பாஸ் வழங்குவர். வெளிநாடு செல்லும் சர்வதேச பயணிகளாக இருந்தால் மீண்டும் ஒரு முறை ஆவண சோதனைக்காக குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் செல்ல வேண்டும். அவர்கள் ஆவணங்களை சரி பார்த்து  விமானத்தில் ஏற அனுமதிப்பர்.

இறுதியாக விமானத்தில் ஏறுவதற்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக   மத்திய பாதுகாப்பு படையினர் உடைமைகளை சோதனை செய்தவுடன் பயணிகள் விமானத்தில் ஏறுவர், இதுதான் நடைமுறை. 

இந்நிலையில் மீண்டும் ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில் தனியார் நிறுவன செக்யூரிட்டிகளை நியமித்து பயணிகளை தாமதப்படுத்துவதுடன், கூட்டத்தை அதிகப்படுத்தி பயணிகளின் உடைமைகள் பாதுகாப்பு சோதனைக்கு நீண்ட வரிசைகளில் பயணிகளை காத்திருக்க வைப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், விமானம் புறப்பாடும் தாமதமாவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

சில தினங்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிக மக்கள் கூட்டம் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சேவை செய்யும் டெர்மினல் 3 க்கு வெளியேயும் உள்ளேயும் பயணிகளை சோதனை என்ற பெயரில் நீண்ட வரிசைகளில் பல மணி நேரம் காத்திருக்க வைத்ததால்  அவர்களில் பலர், இந்தியாவின் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய விமான நிலையத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சோதனை குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை ட்விட்டரில் டேக் செய்தனர்,

அதைத் தொடர்ந்து அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். விமான போக்குவரத்து அமைச்சகம், டெல்லி விமான நிலையம் மற்றும் ஏஏஐ அதிகாரிகளை சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தது. பின்னர், நுழைவு வாயில்களை அதிகரிப்பது, புதிய எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குழப்பத்தைத் தவிர்க்க பயணிகளை 4 மணி நேரம் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தின.


மதுரை விமான நிலையத்தில் கோவிட்-19 க்குப் பிறகு, தேவை அதிகரிப்பு காரணமாக  விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. 
அதிக பயணிகள் பயணிப்பதால், தேவையற்ற பரிசோதனைகள் செய்வதன் மூலம் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக மூத்த குடிமக்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் எக்ஸ்ரே இயந்திரங்கள் வழியாக ஒருவர் செல்லும் முக்கிய பாதுகாப்பு சோதனை, மெதுவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பயணிகள் பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற சோதனைகள் மூலம்  பயணிகளை அதிக நேரம் காத்திருக்க வைப்பதாக விமானத்துறை அமைச்சர், மற்றும் விமான நிலைய ஆணையத்திற்க்கு புகார்கள் அனுப்பப்பட்டிருப்பதாக சிரமத்திற்குள்ளான பயணிகள் தெரிவித்துள்ளனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post