தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.!

 

தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

மழைகாலத்தில் தூத்துக்குடி மக்கள் மழை தண்ணீர் வடியாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிக அளவில் மழை தண்ணீரில் தத்தளித்தனர். குறிப்பாக பிரையண்ட்நகர், சிதம்பரநகர், முத்தம்மாள்காலனி, ரஹ்மத்நகர், குமரன்நகர், ஸ்டேட்பேங்காலனி, அம்பேத்கர்நகர், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், கதிர்வேல்நகர், தபால்தந்திகாலனி, திரவியரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்தநிலையில் கடந்த 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையினால் இப்பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நின்றது. இதனையடுத்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகருக்கு நேரடியாக வந்து பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதே நிலை அடுத்தாண்டு இருக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு முதலமைச்சரின் உத்தரவினை நிறைவேற்றும் வகையில் எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்பட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதமாக மேற்கொண்டனர்.

தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற உடன் இப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து இந்தாண்டு மழைகாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சென்று தினமும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். எஸ்எஸ் மாணிக்கபுரம் சந்திப்பு பசும்பொன்நகர் நான்காம் கேட்டிலிருந்து விஎம்எஸ்நகர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட பிரதிநிதியும் கவுன்சிலருமான இசக்கிராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக நிர்வாகிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,  முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தொடர்ந்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தபோது பார்வையிட்ட இடங்களில் அவரது வேண்டுகோள்படி கடந்த காலங்களை போல் அல்லாமல் மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரையண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட்பேங்காலனி அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷணர் சாருஸ்ரீ ஆகியோரின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post