திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டல மாநாடு... 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

திருப்பூர் புதுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.022) மாபெரும் கொங்கு மண்டல மாநாடு நடைபெற்றது. 


கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும், தமிழக தனியார் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75% வரை வழங்கும் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமியற்ற வேண்டும், கொங்கு மண்டலத்தில் நலிந்துவரும் தொழில் வளத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது வரவேற்புரையாற்றினார். மேலும், மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, ஷஃபீக் அகமது, வி.எம்.அபுதாஹிர், கோவை மண்டல செயலாளர் அப்துல் ஹக்கீம், கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா, நீலகிரி மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் பஷீர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் முஹஸின் காமினூன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் பீர் முகம்மது, சேலம் மாவட்ட தலைவர் அப்சர் அலி, கோவை வடக்கு மாவட்ட தலைவர் நவுஃபல், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஹைதர் அலி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகைதீன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். 

மாநாட்டில் கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், தமிழக தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில் வளத்தைப் பாதுகாத்திட வேண்டும், திருப்பூர் பின்னலாடை தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும், கூட்டாட்சி விரோத, தமிழர் விரோத ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும், கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை மற்றும் பரோல் நடவடிக்கைகளை தமிழக அரசு பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கையை விரைவாக வகுக்க வேண்டும், நாட்டின் பன்முகத்தன்மை கலாச்சாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் பொது சிவில் சட்டம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு நன்றியுரையாற்றினார். இந்த மாநாட்டில் பெண்கள் உள்பட கொங்கு மண்டல மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


 

Previous Post Next Post