அம்பித் பாரத் ஸ்டேசன் திட்டத்தில் மதுரை கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாகிறது.
நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்க அம்பித் பாரத் ஸ்டேசன் என்ற திட்டத்தினை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, புனலூர், கோவில்பட்டி உள்பட 15 ரயில் நிலையங்களை மேம்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறியப்பட்டு அவற்றை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரயில் நிலையங்களில் கட்டிட வடிமைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கையில் எடுக்கும் நிறுவனம், ரயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நல்ல சிற்றுண்டி சாலை, திட்டமிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், தேவையற்ற கட்டிடங்களை அகற்றுதல், தனி பாதைகள், சாலைகளை விரிவுப்படுத்துதல், 5 ஜி அலைக்கற்றை கிடைக்க ஏற்பாடு செய்தல், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் ரயில் நிலைய வளாகங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீளம் இல்லையெனில், உடனடியாக அந்த நீளத்திற்கு நடைமேடை அமைப்பதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை வசதி ஏற்படுத்துவதற்கும் முடிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.