திருச்சி மாநாடு - தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக்கூட்டம்.!

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருச்சியில் ''பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநில மாநாடு'' நடக்கிறது. இம்மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக்கூட்டம் செய்துங்கநல்லூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஸார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரஷீத், துணைச்செயலாளர் பரீத், துணைத்தலைவர் நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் இம்ரான் தீர்மானங்களை முன்மொழிந்தார். 

கூட்டத்தில், மாநில செயலாளர் யூசுப் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சபீர்அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாநில மாநாட்டின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். அதோடு, திருச்சியில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தவறாமல் பங்கேற்றிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் சுலைமான் மாவட்டத்திலுள்ள கிளைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட மருத்துவரணி தமீம் அவசரகாலங்களில் மேற்கொள்ளப்படும் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார். 

கூட்டத்தில், செய்துங்கநல்லூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துவரும் தெருநாய்கள் மற்றும் பன்றிகளின் தொந்தரவினை பஞ்சாயத்து நிர்வாகம் கட்டுப்படுத்திடவேண்டும்,

முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரக்கூடாது, இதனை கொண்டுவந்தால் ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்துவது, தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இடஒதுக்கீட்டை 7சதவீதம் ஆக அதிகரித்து தரவேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், 

திருச்சி மாநாட்டிற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்திடுவதுடன், மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்க செய்திடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்ட மாணவரனி பொறுப்பாளர் அல்தாப் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post