தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி வகுப்புகள் 3 தினங்கள் தூத்துக்குடி மணிநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் நேரு யுவகேந்திரா அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், துணை பேராசிரியர் ஜெயபார்வதி, எழில்மெட்ரிக்ஸ் பயிற்சி நிறுவனம் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லைப் ஸ்கில் பயிற்சியாளர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
அதில் இளையோர் தலைமைத்துவம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி, தேசிய ஒருமைப்பாடு, இணையதளம், சுற்றுப்புற சுகாதாரம், தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, ஆளுமை வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி பேசுகையில்: மாணவ பருவம், கல்லூரி பருவம் இவை இரண்டும் கடினம் தான். இருந்தாலும், முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு, படிக்க வேண்டும். உழைக்க வேண்டும். சமூக வலைதளங்கள் இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்றாக உள்ளது. அதையே முழுமையாக பார்த்துக் கொண்டு பொழுதை கழித்து விட கூடாது. நல்ல தகவல்களை மட்டும் அதிலிருந்து எடுத்துக் கொண்டு அறிவு வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும். விளையாட்டு மற்றும் பல போட்டிகளில் கலந்து கொள்வதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதலாம் பரிசு, இரண்டாம் பரிசு பெறுபவர்கள் மட்டுமல்லாமல் அதில் பங்கேற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக எல்லோருக்கும்; நான் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தி பல விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். அதன் நோக்கம் என்னவென்றால், பரிசு பெறாதவர்கள் மனச்சோர்வடைய கூடாது என்ற நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. தாய், தந்தையர் நமக்கு வழிகாட்டியாக இருப்பதை போல் ஆசிரியர்களும் உள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பிரம்மசக்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய இளையோர் தன்னார்வலர் நேரு யுவகேந்திரா செல்வ நித்யா நன்றியுரையாற்றினார்.