"பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சாலையில் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும்" - திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள்.!

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்க்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

வருடம் தோறும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு சாலை வழியாக நடந்து வரும்பொழுது சாலையில் இடது புறமாகவே குழுக்களாக நடந்து செல்வதால் அதே சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் எப்பொழுதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி இடது புறமாகவே வாகனத்தை இயக்கவேண்டும் என்பதால் அதே இடதுபுற சாலையில் பக்தர்கள் குழுக்களாக நடந்து வரும்பொழுது வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளதாலும், அவ்வாறு வாகனங்கள் மோதுவதை எதிர்பார்க்க இயலாததாலும், கனரக வாகனங்கள் பக்தர்கள் மீது மோதாமல் இருக்க சாலையின் வலது புறம் ஏறிச்செல்வதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள், பெரும் காயம் மற்றும் சிறு காயம் விபத்துகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்படுகின்றன.

எனவே இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டம், சாலை விதிகள் மற்றும் வழி முறைகள் சட்டத்தின்படி பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலதுபுறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்பொழுதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேராவண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக்கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும்.

இது சம்பந்தமாக சாலை வழி நெடுகிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வை உறவினர்களுக்கும், சக நண்பர்களுக்கும் பகிர்ந்து, சாலையில் நடந்து செல்வோர் எப்பொழுதும் சாலையின் வலதுபுறமாகவே நடக்க வேண்டும்"  என  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post