திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கரின் முகம், கை மற்றும் ஆட்காட்டி விரலை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து கண்டணம் தெரிவித்துள்ள சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்..
"திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் சிலையை சமூகவிரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ள செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைளையும், சித்தாந்தங்களையும் முழுமையாக உள்வாங்கி கொள்ளாத சமூகவிரோதிகளின் இழிவான செயலாகத்தான் இதைப் நான் பார்க்கிறேன். எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியலின மக்களுக்கான தலைவர் என்று குறுகிய கண்ணோட்டோத்தோடு பார்ப்பது என்று மாறும் என்று தெரியவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல. இந்தியாவில் நிலவும் ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான சிந்தனை கொண்டவர். அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அவர், 1951ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையை படித்தால் அவரைப்பற்றி விளங்கிக் கொள்ளமுடியும். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர் சட்டப்பூர்வமாக செய்திருக்கும் பிரிவுகளை ஆராய்ந்து பார்த்தால் அவர் அனைவருக்குமான தலைவர் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் பல நூற்றாண்டுகாலமாக பட்டியிலின மக்கள் வழிபட முடியாத நிலையில் தற்போது அந்த பகுதியிலும் மக்கள் வழிபட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளமுடியாமல் அமைதி பூங்காவாகவுள்ள தமிழகத்தில் விளிம்பு நிலை மக்களின் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
மாண்புமிகு செயல்களை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இச்செயலைச் செய்த சமூகவிரோத சக்திகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.