சிவகங்கையில் பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகளான தாசில்தார் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி கணேஷ்குமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலையை அகற்றிய அரசு அதிகாரிகளான தாசில்தார் கண்ணனை சிவகங்கை வனத்திட்ட அலுவலராகவும், டி.எஸ்.பி கணேஷ்குமார் சென்னை தலைமை அலுவலக காத்திருப்புப் பட்டியலுக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் கட்டிய வீட்டின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலையை அமைத்து இருந்தார். வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையை திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி 29-ம் தேதி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உரிய அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பெரியார் சிலை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, தேவகோட்டை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீட்டின் உரிமையாளரான இளங்கோவனிடம் கூறினர். தொடர்ந்து, `அனுமதி பெற்று தான் சிலை வைக்கவேண்டும், அனுமதி இல்லாததால், சிலையை அகற்றுகிறோம்' என்று கூறி சிலையை அகற்றியது சர்ச்சையான நிலையில் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.