குஜராத் படுகொலை ஆவணப் படம் - பிரதமர் மோடியின் பங்கு குறித்து, பி.பி.சி., தயாரித்துள்ள ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரும் இணைப்புகளை முடக்கும்படி மத்திய அரசு உத்தரவு.!

 

புதுடில்லி: குஜராத் கலவரம் மற்றும் அது தொடர்பாக பிரதமர் மோடியின் பங்கு குறித்து, பி.பி.சி., தயாரித்துள்ள ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரும் இணைப்புகளை முடக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

இதில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்துடன், அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடியின் தொடர்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'இந்த ஆவணப்படம், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பான இந்த ஆவணப்படம், காலனியாதிக்க மனோபாவம் இன்னும் தொடர்வதை பிரதிபலிக்கிறது' என, வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வ சந்திரா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'பி.பி.சி., தயாரித்துள்ள ஆவணப்படத்தை பார்ப்பதற்காக, 'யு டியூப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் இணைப்புகளை முடக்க வேண்டும்' என, அந்த நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துஉள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post