அருவியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு ஆட்சியர் பாராட்டு.!

குற்றாலம் அருவியில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது அவரது மகள் ஹரிணி (4) தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள்.

அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த வாடகை கார் டிரைவரான விஜயகுமார் (24) விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய விஜயகுமாரை பலரும் பாராட்டினர். 

இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் தவறி விழுந்த குழந்தையை தன்னுயிரையும் பாராமல் காப்பாற்றிய விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று நேரில் அழைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடன் இருந்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post