தூத்துக்குடியில் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் சமையலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த தொழிற்பயிற்சி மைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரின் மகன் முகம்மதுகான் (37) என்பவருக்கும், வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) பணியாற்றி வந்த தூத்துக்குடி சங்கரப்பேரி, தமிழ்நாடு ஹவுசிங் போடு காலணியைச் சேர்ந்த செந்தில்நாயகம் மகன் மாரியப்பன் என்ற ஐடிஐ மாரியப்பன் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மேற்படி மாரியப்பன், தான் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வருவதால் தனக்கு அதிக பழக்கமும், செல்வாக்கும் இருப்பதாகவும் அதனால் வேப்பலோடை தொழிற்பயிற்சி மையத்தில் சமையலர் வேலை வாங்கித்தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி ரூபாய் 2 லட்சம் வேண்டும் என்று முகம்மதுகானிடம் கேட்டுள்ளார்.
அவரும் அதை நம்பி கடந்த 13.01.2021 அன்று மாரியப்பனின் வங்கி கணக்கில் மேற்படி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மாரியப்பன் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு மாற்றுதலாகி சென்று, பின் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து முகம்மதுகான் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முக சுந்தரம், ராஜ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாரியப்பன் என்ற ஐடிஐ மாரியப்பனை இன்று கைது செய்தனர். மாரியப்பன் இதுபோன்று பலரிடம் ரூ.62 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.