தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சஞ்சீவி பெட்டகம் திட்டத்தில் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை கடைகோடி மக்களுக்கு கொண்டு செல்ல அரும்பாடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்காக நெல்லிக்காய் லேகியம், உளுந்து தைலம், மாதுளை மணப்பாகு போன்ற 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய பெட்டகத்தினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை இதன் மூலம் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.
கொரோனா தொற்று காலங்களில் சித்த மருத்துவத்திற்கென்று தனியாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கல், பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் யோகா, கர்ப்பிணிகளுக்கு சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கல், துணை சுகாதார நிலையங்களின் மூலம் யோகா பயிற்சி மூலிகை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, தொற்றா நோய்களுக்கு யோகாபயிற்சி, கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு அரசின் திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கும் திட்டம் கர்ப்ப காலத்தில் இரத்தக் குறைவினை நிவர்த்தி செய்யவும், சுகப்பிரசவம் ஏற்படவும் சித்த மருந்துகள் பெரிதும் உதவுகிறது. கொரோனா தொற்றுகாலங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ், சாதாரண வைரஸ் தொற்றுகாலங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3,31,936 பொதுமக்கள் பயன்பெற்றனர். வீட்டு சிகிச்சையிலே நோயாளிகள் குணமடைந்தனர். மேலும் உயிரிழப்பினை வெகுவாக குறைத்தது இதன் சாதனையாகும்.
அரிய வகை மூலிகை மரங்கள் அழிந்து வரும் சூழலில், பசுமை காடுகள் வளர்க்க மூலிகை மரக்கன்றுகள் வழங்கல் திட்டத்தில் தமிழக அரசினால் பொதுமக்களுக்கு இந்திய மருத்துவத்துறையின் சார்பில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம், மருத்துவ குணம் நிறைந்த மூலிகை மரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதுடன் நமது பாரம்பரிய மருத்துவத்தினை காப்பதாக அமைந்துள்ளது.
கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 2317 பேர் பயன் பெற்றுள்ளனர். யோகா பயிற்சிகள் கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவுவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.