பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக மலைக்கோவில் வளாகமும் பழனி நகரமும் மின்னொளியில் தகதகவென்று ஜொலிக்கிறது. கோவிலின் இரவு நேர கழுகுப் பார்வை காட்சிகள் காண்போரை பிரமிக்க வைக்கிறது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற தமிழ்க்கடவுள் முருகன் அருள்பாலிக்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 27ம் தேதி காலை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. மலைக்கோயிலில் சுமார் ஆறாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 90க்கும் மேற்பட்ட யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு ஓதுவார்கள், சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் முழங்கி வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கப்படுவதோடு பக்தர்கள் அந்த நேரத்தில் மட்டும் இலவசமாக பழனிக்கு வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மலைக்கோயில் முதல் பாதவிநாயகர் கோயில் வரை குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி 26ம் தேதி பாதவிநாயகர் கோயில் முதல் படிப்பாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும் மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் தகதகவென ஜொலிக்கும வகையில் உள்ளது. நமது கழுகுப் பார்வை காட்சிகளில் பழனி மலைக்கோவில் மின்னொளி காட்சிகள் மற்றும் பழனி நகரத்தின் பின்னணி காட்சிகள் அனைத்தும் சேர்ந்து நம்மை பிரமிக்க வைக்கிறது.
- பழனி ரியாஸ்