தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக போலியாக விளம்பரப்படுத்தி ரூ.10 லட்சத்திற்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ஷேக் முகைதீன் மகன் முகமது அப்பாஸ் (36) என்பவர் கடந்த 27.012022 அன்று தூத்துக்குடியில் வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், அதில் அபுதாபியிலுள்ளஅபுதாபி கேஸ்கோ என்ற கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் துண்டுபிரதிகள் மூலம் விளம்பரப்படுத்தியதின்பேரில், அந்த விளம்பரத்திலுள்ள தொலைபேசி எண்ணிற்கு தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் காமராஜ் (42) மற்றும் சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்களிடம் முகமது அப்பாஸ் வெளிநாடு செல்வதற்காக தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்தான் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, மருத்துவமனையில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு நபருக்கு ரூ.7,500/- வீதம் 16 பேருக்கு ரூ.1,20,000/-மும், அதேபோல் தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 நபர்களிடம் தலா ரூ.20,000/- வீதம் ரூ.1,60,000/-மும், ஆக மொத்தம் ரூ.2,80,000/-த்தை பெற்றுக்கொண்ட முகமது அப்பாஸ் மேற்படி காமராஜ் உட்பட சிலரிடம் போலியான உறுதிப்படுத்தும் கடிதம் (Confirmation Letter) கொடுத்து விரைவில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த 21.06.2022 அன்று காமராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)ஜெயராஜ் மேற்பார்வையில் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார் மற்றும் தலைமை காவலர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரி முகமது அப்பாஸை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இதுபோன்று பல்வேறு இடங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் பணம் வசூல் செய்து ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.