தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சேகர் (44) என்பவர் கடந்த 13.01.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ராஜா தெரு பகுதியில் நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சேகர் இன்று (21.01.2023) அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜ்குமார் (47) என்பவர் மேற்படி சேகர் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ராஜ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 10,000/- மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.